பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

147


விற்றுக்கோள்: அது, அவ்வாறான கேடு - தன்னை இன்னொருவனிடம் - விற்றுக் கொண்டாயினும்

தக்கது உடைத்து: பெற்றுக் கொள்ளும் - ஏற்றுக்கொள்ளும் தகுதியை உடையது.

- அஃதாவது, அக்கேட்டினை இவன் தன்னை இன்னொருவனுக்கு விலைபேசி விற்றுக் கொண்டும் ஏற்றுக்கொள்ளலாம். அக்கேட்டுக்கு அத்துணைத் தகுதி உண்டு என்றவாறு,

- அக்கேட்டால் தனக்கு இழிவு நேராது. அவ்வாறு இழிவோ தாழ்ச்சியோ ஏற்படுமானால், அதனைத் தன்னை ஒருவனிடம் விலைபேசி விற்றுக் கொண்டு, அப்பணத்தைக் கொண்டேனும் அக்கேட்டையோ, இழிவையோ, தாழ்ச்சியையோ போக்கிக் கொள்ளலாம்.

- அல்லது அவற்றை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். அந்த வகையில் அக்கேடு பெருமை உடையது என்றார்.

3). நூலாசிரியரும் ஒருவருடைய பெருமை சிறுமைகள் அவருடைய பொருள்நிலையைக் கொண்டு கணிக்கப் பெறுவதில்லை. அவ்வாறான தாழ்வு நிலைகள் அத்தகைய ஒருவருக்குப் பெருமை தருவதேயாகும் என்னும் கருத்தைப் பல வடிவங்களில், பல கோணங்களில் எடுத்துக் காட்டுவது, கவனிக்கத் தக்கது.

‘கெடுவாக வையாகும் உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு’ - 117

‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்’ - 505

துன்பம் உறவரினும் செய்த துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை' – 669

‘இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் - 988

‘சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து' - 1010

இவையொட்டிச் சான்றோர் பிறர் கூறும் கருத்துகளும் கவனிக்கத் தக்கன.

'நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து' - நல்வழி:9

'நல்லாறு ஒழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்
அல்லன செய்தற் கொருப்படார்' - நீதிநெறி:60:1-2