பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அ-2-15 புறங்கூறாமை -19


ஆனால், இப் பொருள் இன்னும் விரிவு பெற்று, 'ஒருவரைப் பற்றிய கமுக்கமான, அகநிலையான, தனிப்படியான செய்திகளைப் புறத்தே உள்ளவர்களிடம், அயலிடத்தவர்களிடம் போய்க் கூறுதல்' என்று பொருள் விரிவு பெற்றது.

ஒருவரைப் பற்றி மற்றொருவர் வெளியிடத்தவர்களிடம் போய்ச் சொல்லும் செய்தி, மனவியல்படி, எப்பொழுதும், அவரைப் பற்றிய குற்றம், குறைகள், மெலிவு நலிவுகள், உள்முகமான கமுக்கங்களாகவே இருக்கும்.

மக்கள் பேசுகின்ற பேச்சுகளில் பெரும்பாலும் பிறரைப் பற்றிப் பேசுவதே கூடுதலாக உள்ளது. தம்மைப் பற்றிப் பேசுவது எப்பொழுதும் குறைவாகவே உள்ளது என்பது ஒரு மாந்த மனவியலாகும்.

பிறரைப் பற்றிப் பேசுவதினும், அவரைப் பற்றிய நல்ல செய்திகளை ஒருவர் மற்றவரிடம் அவ்வளவு விருப்பமாகச் சொல்வதில்லை; மற்றவரும் அவற்றை அவ்வளவு விருப்பமாகக் கேட்பதில்லை. எனவே, உலகியல்படி கெட்ட செய்திகள் பரவுவது போல, நல்ல செய்திகள் அவ்வளவு விரைவாக உலகியலில் பரவுவதில்லை.

ஆகவேதான், ஒருவர் பிறரைப் பற்றிய நல்ல செய்திகளையே சொல்லுதல் வேண்டும் சிறுமையான செய்திகளைச் சொல்லாமல் புறங்காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்று சான்றோர் அறிவுறுத்துவர்.

‘கண்டு ஒன்று சொல்லேல்' - ஆத்திசூடி:14

‘ஒருவனைப் பற்றி ஓரகத்திரு’ - கொன்றைவேந்தன்:10

'கோட் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு’ - மேற்படி:24

‘கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை’ - மேற்படி:25

‘குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்’ - உலகநீதி:4:1

‘பிறரால் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும்
மறவாமே நோற்பதுஒன்று உண்டு பிறர்பிறர்
சீர்எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து
யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்’
- நீதிநெறி விளக்கம்:19

‘அறம்கூறும் நாளன்ப நாவும்; செவியும்
புறங்கூற்றுக் கேளாத என்பர்’
- அறநெறிச்சாரம்:203:1-2

'கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப்
பழித்துப் பலர்நடுவண் சொல்லாடார் என்கொல்
விழித்தலரும் நெய்தல் துறைவ! உரையார்

இழித்தக்க காணின் கனா’
- பழமொழி:182