பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

அ-2-19 ஈகை 23


களிக்குமா வைத்தந்தான் கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா றெவ்வாறு அவன்’ - தனிப்பாடல்

(இதில் சோற்றுக்கு அரிசிதரக் கேட்டதற்கு அவன் களிக்கு மாவைத் தந்தான் என்று பழிப்பது போலும் புகழ்வது. களிக்குமா - ஆண்யானை - களிறு, இது வஞ்சகப் புகழ்ச்சியனி.)

‘பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்’ - புறம்:375:71

‘பொழிபெயல் வண்மை’ - கலி:57:12

‘மழை சுரந்தன்ன ஈகை’ - அகம்:238:13

'வரையா ஈகை உரவோன் மருக’ - புறம்: 43:8

(வரையில்லாத அளவில்லாத ஈகை)

'வரையா ஈகைக் குடவர் கோவே’ - புறம்:17:40

வரிசையறிதல்:

இனி, இத்துணை ஈகைச் சிறப்பும், அதைத் தம் பிறவிக் கடனென்று ஆற்றி மகிழ்ந்த கொழித்த பொருள் வளமும், செழித்த மன நலமும் கொண்ட வள்ளண்மை மிக்க அரசரும் பெருந்தகைச் செல்வரும் மிக்கிருந்த அக்காலத்தையே, பொருளுக்காக மட்டுமன்றித் தம் பாவன்மைக்கும் அறிவுப் புலமைக்கும் இழுக்கும் தாழ்ச்சியும் நேராத வகையில், தன்மானமும், பெருமிதமும் கொண்ட புலவர் பெருமக்களும் உடன் இருந்தமையும் இடன் நினைந்து பாராட்டுதற்கும் பெருமைப்படுதற்கும் உரியது.

அறிஞர்களுக்கும் புலவர்களுக்கும் அரசர்களும் செல்வர்களும் ஈகை அளிப்பதாலும், அவர்களைப் பாராட்டிப் பரிசுகள் கொடுப்பதாலும், அவர்களை வெறும் இரவலர்களாக மட்டும் கருதிவிடக்கூடாது என்னும் கருத்தை இந்நூலாசிரியப் பெருமானும், சான்றோர் பிறரும் எடுத்துக் கூறியிருப்பதைக் கருதுதல் வேண்டும். இதற்கு வரிசையறிதல், ‘தகுதியறிதல்' என்று பெயர். ஆசிரியர் இதனைச் 'சுற்றந் தழால்’ அதிகாரத்தில் இவ்வாறு கூறுவர்.

‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்’ - 528

இவ்வுணர்வு, ஈகையறம் மிகச் சிறந்திருந்த அக்காலத்திலேயே, நன்கு உணரப் பெற்றிருந்தது, என்பதற்கும் கழக இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. அவற்றை மிகவும் விரிக்காது, எடுத்துக்காட்டு அளவில் மட்டும் ஒரு சில பாடலடிகளைக் கீழே தருகிறோம்.