பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

167


பாரியே என்று கூறினும்' என்று தேவாரம் பாடிய நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரால் புகழப் பெற்றவன். இவன் வேள்பாரி எனப் பெற்றான். இவனைப் பாடிய புலவர் கபிலர் நன்னாகனார் முதலியோர்.

- வேள்பாரி கொடைமடம் பட்டவன் என்று சொல்லப் பெறுபவன்.

- கொண்ட மடம் என்பது 'வரையாது கொடுத்தல்' ஆகும் என்பது திவாகரம்!

 ‘கொடைமடம்’ என்று சொல்ப வரையாது கொடுத்த லாமே!

- என்பது, சூடாமணி (9.10)

- அஃதாவது, ஞாயிற்றொளியும், திங்கள் நிலவும் வான் மழையும் போல, இன்னோர்க்கு இஃது இவ்வளவு என்று வரையறையின்றி, மாந்தர் உயிர்கட்கும், மற்று விலங்கு, பறவை, நிலத்திணை ஆகிய அனைத்து உயிர்கட்கும் தண்ணளி செய்தலாகும்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ - 322

- என்று ஆசிரியர் கூறுதலும் கருதத் தக்கது.

‘முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப
அறிமடமும் சான்றோர்க்(கு) அணி' - பழமொழி:361

'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்.
அதனால், நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திறல் ஆண்மையும்
திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையும் மூன்றும்
உடையை யாகி இல்லோர் கையறக்’ - புறம்:55:10-16

- கொடுத்தலாகும்

- பாரியும், ஓரறிவுடைய அஃறிணை உயிராகிய பூத்து விளங்கும் முல்லைக் கொடி, பற்றுக் கொம்பின்றித் தரையிலூர்ந்து படர்ந்து கிடந்ததைக் கொண்டு மனம் பொறாதவனாகி, அது படரத் தான் ஏறிவந்த தேரையே பற்றுக் கோடாக்கி நிலைநிறுத்தி விட்டு நடந்து சென்றான்