பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

177


கூசிக் கூசி நிற்பர் கொடுத்துண்டு அறியாதார்' - சீவக:2929:3-4

‘கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளண்மை இன்னா’
- இன்னா:39:1

‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்’ - குறுந்:63:1

'செய்வினை மருங்கில் எய்தல் அல்லதை
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
கடவ தன்மையில் கையற வுடைத்து' -புறம்:38:13-15

‘இன்னா, பொருளில்லார் வண்மை பரிவு’ - இன்னா:11-4

‘ஈத்த வகையால் உவவார்க்கு ஈப்பு இன்னா’ - இன்னா:21:1

‘இடும்பை உடையார் கொடைஇன்னா’ - இன்னா:6:3

‘இல்லார்க்கொன்று ஈயாது ஒழிந்தகன்ற காலையும் . . . . .
நோயே உரனுடை யார்க்கு’ - திரிகடு:44:3-4

- ஆக, இதுகாறும் கூறிய வற்றால், ஈகையறம் மக்கள் உயிர் வாழ்க்கைக்கே பெருமை வாய்ந்ததென்பதும், அதுவே உலகப் பொதுமைச் சமநிலைக்கு அடிப்படையான நல்லுணர்வு என்பதும், அவ்வறவுணர்வு தமிழினத்தில் தொன்று தொட்டே தோன்றி வளர்ந்து பெருகிய பண்பாடு என்பதும், அதுவும் கற்றார்க்கும் வறுமையுற்றார்க்கும் ஏதிலர்க்கும் ஏழையர்க்கும், இயலாப் பிறர்க்கும் அவரவர் தகுதி, வரிசை தேவையறிந்து செயல்படுதல் வேண்டும் என்பதும், அத்தகைய வள்ளலர் நந்தமிழகத்தே பலர் வாழ்ந்திருந்தனர் என்பதும், அவ்வறம் செய்யவியலாத ஏழையரும் உள்ளனர் என்பதும் பல்வகையானும் உணர்த்தப் பெற்றன.

இனி, இவ்வறவுணர்வு அறிவியல் வளர்ச்சி பெற்று வரும் இக்காலத்துப் படிப்படியே குன்றிக் குறைந்து தேய்ந்து மறைந்து வருதல் மிகப்பெரிதும் வருந்தத் தக்கதாம் என்க. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் நல்லுணர்வாகிய இவ்விகையறப் பண்பு மக்கள் மனத்துள் மறைந்து விடின், அறவுணர்வு இருண்டு விடுமோ என்னும் அச்சம் சான்றோர்க்கு ஏற்படுவது இயற்கை என்க. இவ்வறம் மேம்பட்டுச் செழிப்பதற்கு இங்குக் கூறப்பெற்ற கொழுமைக் கருத்துகளை பயன்படுதல் வேண்டும்.

ஒப்புரவுணர்வு பெருங்கடல், பேராறுகள் போன்றதெனின், ஈகைவுணர்வு, ஏரி, குளம், குண்டு, குழி, கிணறு, ஊற்று போன்ற நீர்நிலைகளை ஒத்தது, என்க. எனவே, அதனையடுத்து இவ்வதிகாரம் வைக்கப்பெற்றது.