பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அ-2-15 புறங்கூறாமை -19


'அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்’ - 1076

இனி, 'புறங்கூறாமையைக் காணாதவழிப் பிறரை இகழ்ந்துரையாமை’ - என்பார், பரிமேலழகர்.

‘யாவரையும் இகழ்ச்சியானவற்றைப் புறத்து உரையாமை' - என்பார், மணக்குடவர்.

‘ஒருவர் குற்றத்தையும் புறஞ்சொல்லாமை என்பார், பரிதியார்'.

பாவாணர், 'ஒருவரில்லாவிடத்து, அவரைப் பற்றித் தீதாகப் பேசாமை’ என்பார். அவர், மேலும்

‘புறம்' - முதுகு அல்லது பின்பக்கம். ஒருவரில்லாத இடம் அவருக்குத் தெரியாத முதுகுப் பக்கம் போன்று இருத்தலால், புறம் எனப்பட்டது. புறத்தில் கூறுதல் புறங்கூறுதல், அது 'புறம் எனவும் படும்' என்று விளக்குவார்.

இவையனைத்தும் ஒருசார்புப் பொருளுடையவையே.

இனி, 'புறங்கூறாமை' யின் முழுப்பொருள், 'ஒருவர் குற்றம் குறைகளை மற்றவரிடம் சென்று, பழித்தும் இழித்தும் கூறாமையே' ஆகும்.

இப் பொருள் இவ்வதிகாரத்துள் நன்கு புலப்படுத்தப் பெற்றுள்ளது.

‘பிறன்பழி கூறுவான்’ - 186

'துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்' - 188

‘ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்’ - 190

இதனை, ஒர் அறமாகக் கூறுவர், ஆசிரியர். பொதுமை நலத்திற்கு இஃது இன்றியமையாதது ஆகலின், இஃதோர் அறக்கூறாயிற்று.

'புறங்கூறுதல்' எனும் சொற்பொருளில், குறளை, கோள், புறணி, பறைதல், குண்டணி (குண்டுணி - என்பார், பாவாணர்), குற்றறை (குத்தறை கொத்றை கொங்கு நாட்டுச் சிற்றுார்புற வழக்கு), பழிகூறல், அவதூறு கூறல் - முதலிய சொற்கள் அகரமுதலிகளிலும், சொல் வழக்கிலும் கூறப்பெறுகின்றன.

இவற்றுள், புறங்கூறுதல், குறளை என்னும் இரு சொற்களே கடைக் கழக நூல்களுள் வழங்கப் பெறுகின்றன. பிற சொற்கள் மிகப் பிந்திய வட்டார வழக்குகள் ஆதல் வேண்டும்.

புறங்கூறுதல் :

‘எற்புறங் கூறும் என்ப'

- குறுந்:364:4

'பழியிலர் ஆயினும் பலர்புறங் கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்’

- அகம்:115:2-3