பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

179


மடங்கு உயர்ந்த செல்வனாலேயே தர இயலும். இங்குக் கூறுவது அது போலும் சிறப்புக் கொடையாக இருத்தல் இயலாது. பொதுவான மக்களிடம் இயல்பாக இருக்க வேண்டிய ஈகையுணர்வே இங்குச் சுட்டப் பெறுவதால், தம்மால் இயன்றது என்னும் பொருளே பொருந்துவதாகும் என்க.

ஈவதே ஈகை: தருவதே ஈகையாகும். இவ்விடத்துப் பாவாணர் காட்டும் ‘ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே' என்னும் தொல்காப்பிய நூற்பாக்கருத்து பொருந்தாது; வறியவன்.

2) மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து :

மற்றக் கொடையெல்லாம் திருப்பிச் செலுத்தும் குறித்த எதிர்ப்பை உடையதாகும்.

குறியெதிர்ப்பை: திருப்பிச் செலுத்தும் குறித்த எதிர்ப்பை,

- இச்சொல்லுக்குப் பரிமேலழகர், 'அளவு குறித்து வாங்கி அவ் வாங்கியவாறே எதிர் கொடுப்பது' என்று பொருள் தருவார்.

பாவாணரும், 'அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறும் கடன்' என்றே விரிப்பர்.

- அவர்கள் கூறுவது 'கடனே'யன்றி ஈகையன்று. ஒப்புப் பேசிக் கொடுத்து வாங்குவது, கடன்.

- இவ்விடத்தில் குறியெதிர்ப்பை யென்பது வாங்கியதை அவ்வாறே திரும்பப்பெறும் நோக்கத்தில் கொடுப்பது என்னும் பொருளுடையதன்று.

-நூலாசிரியர், 'மற்றெல்லாம்' என்று குறிப்பிடுவது, 'மற்ற ஈகையெல்லாம்’ என்று பொருளாகுமே தவிர 'கொடுத்து வாங்கும்' பொருளை அப்படியே தருவது என்னும் பொருளைத் தராது.

- எனவே 'கொடுத்த பொருளைக் கொடுத்த அளவிலேயே திரும்பப் பெறும் நோக்கத்தை உணர்த்தும் சொல்லாக இங்கு அது பயன்படுத்தப் பெறவில்லை' என்பதை உணரவேண்டும். -

- மற்றெல்லாம் என்னும் சொல்லுக்கு மற்ற ஈகையெல்லாம் என்றே பொருள் கொள்ள வேண்டியிருப்பதால் அவ்வாறு பொருந்தாது. எனவே 'குறியெதிர்ப்பை நீரது' என்றால், 'ஏதோ ஒரு வகையில் திருப்பிச் செலுத்தும் எதிர்பார்ப்புத் தன்மை' என்றுதான், இவ்விடத்தில் பொருள் கொள்ளுதல் வேண்டும்.