பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

அ-2-19 ஈகை 23



- அவ்வாறு திருப்பிச் செலுத்தப் பெறுவது, காலத்தாலும் இடத்தாலும் அதே பொருளாகவும் இருக்கலாம்; அல்லது செயல் உதவியாகக் கூட இருக்கலாம்; இந்த நிலையே ஆசிரியரால் இங்குச் சுட்டப் பெறுவது என்பது தெளிக.

- வறுமையில் உள்ள ஒருவன், தான் பிழைத்துக் கொள்வதற்கு என ஒரு தொழில் முதலீட்டை எதிர்பார்க்கிறான் என்று அறிந்து, ஒருவன் அவனுக்கு ஒரு தொகை கொடுத்து அவனை அத்தொழில் தொடங்கச் செய்கிறான். அவன் அம்முதலீடு கொண்டு உழைத்துச் செல்வன் ஆகிறான். ஆனபின், தான் வாங்கிய அத்தொகையைப் பெற்றவனிடம் அவ்வளவிலேயோ அல்லது அதற்குக் கூடுதல் சேர்த்தோ திருப்பிச் செலுத்த வருகிறான். முன்னர் இவனுக்கு தொகை கொடுத்து உதவியவன். அதைப் பெற்றுக் கொள்வான் எனில் அஃது ஈகையன்று. பெற்றுக் கொள்ள விரும்பிலன் எனில் அஃது ஈகையாகும். அவ்வாறும் நிகழலாம்.

- இஃதிவ்வாறன்றித் தொகை பெற்றவன், தான் பெற்றதற்கும் மேலாகத் தனக்கு உதவியவனுக்கு வேறு ஒரு பொருளைக் கொடுப்பதோ அல்லது செயலுதவி செய்வதோ, அதனை அவன் பெறுவதோ கூட ஈகையன்று.

- அவ்வாறு அவன் எதிர்ப்பார்த்துக் கொடுத்திருப்பின் அதுதான் 'குறியெதிர்ப்பை நீரதுடைத்து' ஆகும். குறியெதிர்ப்பைக்கு இன்னொரு பொருள், 'கைம்மாறு’ என்றும் பொருள் கொள்ளலாம். அவ்வாறு கொண்டால் அச் சொல்லுக்குப் பொருள் ஏதோ ஒருவகையில் திருப்பிச் செலுத்தும் எதிர்பார்ப்பு என்பதேயாகும்.

- இந்தச் சொல் கழக இலக்கியங்களுள் வேறு இடங்களில் பயன்படுத்தப் பெற்றிருப்பதும், ஏறத்தாழ இதே பொருளை வழங்குவதும் நுணித்து உணரலாகும்.

'உயிர்க்குறி யெதிர்ப்பைப் பெயலருங் குறைத்தே’ - நற்:93:12

‘நெடுங்குறி யெதிர்ப்பை நல்கியோர்க்கும்’ - புறம்:193:4

‘கூற்றும் குறியெதிர்ப்பைக் கொள்ளும் தகைமைத்தே - முத்தொள்:26:3

3) ஆசிரியர் ஈகை அல்லது கொடை அல்லது உதவுதல் என்று குறிப்பிடும் இடங்களில், 'தக்கார்க்கு' என்று இரண்டு இடங்களிலும் 'அற்றார்க்கு' என்று ஓரிடத்திலும் குறித்துள்ளார்.

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு’ - 212

‘ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்(கு) ஒன்று
ஈதல் இயல்பிலா தான்' - 1006