பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

அ-2-19 ஈகை 23


பெறுநன்றி மன்னும் பெரிதென்று - உறுநன்றி
தான் அவாய்ச் செய்வது உம் தானமன்று என்பதுவே
வான்அவாம் உள்ளத் தவர்’ - யாப்.விரு.4.மேற்.

‘என்றார் பிறரும்.

4) இத் தொடக்கச் செய்யுளின் கண் ஈகையறத்திற்குரிய தெளிவான விளக்கம் கூறப்பெற்றது.


உஉஉ நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. - 222

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை: அறவழிச் செயல்களுக்காகவே என்றாலும்கூடப் பிறரிடமிருந்து பொருள் பெறுவது தீமை தரும். மேலுலகம் இல்லை என்றாலும் பிறர்க்கு ஈவதே நல்லது.

சில விளக்கக் குறிப்புகள்:

1) நல்லாறு எனினும் கொளல் தீது: அறவழிச் செயலுக்காகவே என்றாலுங்கூட, பிறரிடமிருந்து பொருள் பெறுவது தீமை தரும்.

நல்ஆறு - நல்லாறு - அறவழியான செயல்கள்.

- இதனை 'வீட்டுலகிற்கான நல்லநெறி’ என்பார் பரிமேலழகர்.

‘வீட்டுலகிற்கான' என்பது மதவழிப் பொருள்கோள் மயக்குடையது.

- பாவாணரும் பிறர் சிலரும் இதை வழிமொழிவது இழுக்கு,

- மணக்குடவர், 'நன்மை பயக்கும் நெறி' என்றது ஒருவாறு பொருந்துவது.

- பொதுமையறம் செய்வார் மக்கள் நலத்துக்கான செயல்களைச் செய்ய, சிலபொழுது பிறரிடமிருந்து நன்கொடைகள் பெறுவது வழக்கம். ஆனால் இவற்றையும் கூடத் தன் முயற்சியால் வந்த பொருளைக் கொண்டு செய்வதே நல்லது என்பது ஆசிரியர் கருத்து. என்னை?

‘தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு’ - 272

- என்றாராகலின்.