பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

187


புகலருந் தீமை புரிபவர் மல்லர்
செருக்கினர் புன்தொழில் தீயோர்
இகழ்தரும் இனையோர் ஒன்பது பெயர்க்கும்
ஈந்திடல் பழுதென இசைப்பார்' - காசிகாண்டம்.

- அதைத் தகர்ப்பான் வேண்டி 'மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று' என்று அழுத்திச் சொல்ல வேண்டிய தேவை நூலாசிரியர்க்கு, அக்காலச் சூழ்நிலையில் வேண்டுவதாயிற் றென்க,

- மற்று, 'மேலுலகம்' என்பதைச் சிலர் 'புகழுலகம்' 'சான்றோர் உலகம்' என்றெல்லாம் கூறுவது, பொருத்தமில்லை என்று கூறிவிடுக்க, அதற்கு அவர் பெய்துள்ள சொற்களாக மேலே எடுத்துக் காட்டப் பெற்றுள்ளனவே சான்றாம் என்க.

- இல்லெனினும் ஈதலே நன்று: (மேற்கூறப்பெற்ற மேலுலகம் புகுதல்) இல்லையெனச் சில நூல்கள் அல்லது பிறர் கூறினாலும், ஈதலறம் செய்வதுதான் நல்லது.

- நன்று - என்றது. நல்ல பயன்களைத் தரும் எனல் வேண்டி.

- இங்கு, 'எனினும் என்பது இருவழியும் அங்ஙனம் கூறுவாரின்மை விளக்கி நின்றது' என்பார், பரிமேலழகர்,

- அதனினும், ‘நிகழ்வருமை கூறி, ஒரோவொருகால் வேற்றுநூல் ஆசிரியர்கள் அவ்வாறு கூறினும்' என்று நிகழ்வு ஐயப் பொருள் கொள்ள வேண்டும்' என்று கூறுதலே பொருத்தம் என்க.

3) இஃது, ஈகை எவ்வகையானும் சிறப்பிழப்பதில்லை என்னும் உறுதி கூறுதலால், முன்னதன் பின்னர் இயைபு கொண்ட தென்க.


உஉ௩ . இலனென்னும் எவ்வம் வரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள. - 223

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை: 'நான் இல்லாத ஏழையாக உள்ளேன்' என்று தன்னிடம் உதவிக்கு வந்தவன் தன் துன்ப நிலையைக் கூறாத முன்பே குறிப்பறிந்தும், அவன் மற்றும் இதுபோல் இன்னொருவரிடம் போய் இரந்து கேளாதவாறும், அவனுக்குக் கொடுத்து உதவுதல், நல்ல குடிமரபில் வந்தவனிடம் உள்ள குணமாகும்.