பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

அ-2-19 ஈகை -23


பொழிப்புரை: உண்ணுதற்கு ஏதுமற்றவரின் உயிர்அழிக்கும் பசியைத் தீர்த்து உதவுக, அவ்வறச் செயலே, செல்வம் பெற்றவன் ஒருவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) அற்றார் அழிபசி தீர்த்தல் : உண்ணுதற்கு ஏதுமற்றவரின் உயிர்அழிக்கும் பசியைத் தீர்த்து உதவுக.

அற்றார் அழிபசி: உண்ணுதற்கு ஏதுமற்றவர் உயிர் அழிக்கும் பசியை.

அழிபசி என்பது அடுத்து வந்ததால், 'அற்றார்' என்பதற்கு உண்ணுதற்கு ஏதுமற்றவர் என்று கொள்ள வேண்டியதாயிற்று.

அழிபசி: உயிர் அழிக்கின்ற பசி, கொடும்பசி-வினைத்தொகை முன்னரே ஆசிரியர், 'உடற்றும்(வருத்தும்)பசி' 13 என்றார். மற்றும், ‘ஊறு(மிகுந்த)பசி 734 என்பார்.இதன் மேல் விளக்கம் 217-ஆம் குறள் விளக்கத்துள் காண்க - உயிரையும் மற்ற உயிர்ப்பொருள்களையும் பசி அழிப்பதால் 'அழிபசி' என்றார்.

‘மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம்’
- நல்வழி:26

‘குடிப்பிறப் பழிக்கும்; விழுப்பம் கொல்லும்;
பிடித்த கல்விப் பெரும்புனை விடுஉம்;
நாண்அணி களையும்; மாணெழில் சிதைக்கும்;
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்;
பசிப்பிணி என்னும் பாவி’

- மணி. 11:76-80

- என்றார், ஆகலின்.

தீர்த்தல்: தீர்த்து உதவுக. தீர்க்க-'தல்' ஈற்று வியங்கோள் வினைமுற்று. - பசி மாந்த உயிர்களை அழிப்பதால் அதைத் தீர்த்தலே தலையாய அறம் என்பது முன்னுரைக்கப் பெற்றது.

2) அஃது, பொருள் பெற்றான் ஒருவன் வைப்புழி : அஃது : அப்பசியைத் தீர்த்த அறச் செயலானது. பொருள் பெற்றான் ஒருவன் : செல்வம் பெற்றவன் ஒருவன். பெற்றான். வரப்பெற்றான். தன் முயற்சியால் பொருள் வரப்பெற்றான்.