பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

19



சில விளக்கக் குறிப்புகள் :

1. ஒருவன் அறங்கூறான் - ஒருவன் அறத்தைப் பற்றித் தெரிந்தும் அதைப் பிறரிடம் எடுத்துச் சொல்லாதவனாகவும்.

- அறத்தைப் பற்றித் தெரிந்தவன் அதைப் பிறர்க்கு எடுத்துச் சொல்வது என்பதும் ஓர் அறம் ஆகும். என்னை?

‘அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்’ - 96

'அகத்தானாம் இன்சொல் இனிதே அறம்’ - 93

- என்றார் ஆகலின்.

- இத்தொடர்க்கு உரையாசிரியர்கள் அனைவருமே,

'ஒருவன் ‘அறன்' என்று சொல்லுவதும் செய்யாது' (பரிமேலழகர்)

'ஒருவன் அறத்தை வாயால் சொல்லுதலும் செய்யானாய்' (மணக்குடவர்)

‘புண்ணியத்தின் வழியைப் பேசான்' (பரிதியார்)

‘தன் நாவினால் ஒருவன் அறத்தினைச் சொல்லானுமாய்’ (காலிங்கர்)

‘ஒருவன் அறம் என்னும் சொல்லையும் சொல்லாது’ (பாவாணர்)

- என்றவாறு, ‘அறம்’ என்னும் சொல்லைச் சொல்லுதலையே பொருளாகக் குறித்திருப்பது வியப்பைத் தருகிறது. அது குன்றக் கூறலாகும். 'அறம்' என்னும் சொல்லை வாயால் சொல்லுவதிலோ சொல்லாமலிருப்பதிலோ குறிப்பிடத் தகுந்த எந்தச் சிறப்போ, இழிவோ இருப்பதாக எவரும் கருத வியலாது.

இதனை மெய்ப்பொருளாசிரியராகிய நூலாசிரியர் பெரிதுபடுத்திப் பேசினார் என்பதும் அவர்க்கு இழுக்கே

- வாயால் ஒருவன் ‘அறம்’ என்னும் சொல்லைச் சொன்னால் என்ன? சொல்லாமற் போனால்தான் என்ன ? அதனால் யாருக்கு என்ன ஊதியம் அல்லது இழப்பு?

- எனவே, ’அறம்’ என்னும் வெறும் சொல்லை ஒருவன் கூறுவது பற்றி ஆசிரியர் இங்குக் குறிப்பிடவில்லை என்பதை உணர்தல் வேண்டும்.

- அவர் குறிப்பிட வந்தது,

‘ஒருவன் அறத்தைப் பற்றித் தெரிந்திருக்கிறான்; ஆனால், அவன் அதைப் பிறர்க்கு எடுத்துக் கூறாமல் இருக்கிறான்' என்பது பற்றியே ஆகும்.

- ஏனெனில், ‘அறத்தைப் பற்றி ஒருவன் தெரிந்து கொள்வதும், அதைப்