பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

21



- அவன் செய்யும் ஒர் அறச்செயல், புறங்கூறாமல் இருப்பது.

- இங்கு, ஆசிரியர் கருத்து என்னெனில், ‘அவன் முதலிரண்டு அறத்தவறுகள் செய்யினும், 'புறங்கூறாமை' என்னும் ஒர் அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகுகிறானே. அது நல்லது' என்பது.

- அவன் செய்யும் முதலிரண்டு அறத்தவறுகளால் வரும் தீமை அவனுக்கு மட்டுந்தான்.

ஆனால், அவன் செய்யும் நல்லறமாகிய 'புறங்கூறாமை'யால் பிறர் நன்மை பெறுகிறார்கள். எனவே, அவன் செய்யும் முதலிரண்டு அறத்தவறுகளைவிட அவன் செய்யும் அறம் நன்மை மிக்கது; அத்தவறுகள் இவ்வறத்தினால் பெரிதாகத் தெரிவதில்லை என்கிறார். ஏனெனில் இவ்வறம் பொதுப்பயன் விளைவிப்பது. முதலிரண்டு அறத்தவறுகள் அவனுக்கு மட்டும் தனித்தீமை தருவன. எனவே அவற்றினும் இது நல்லது என்கிறார்.

5. வெறும் 'இனிது' என்னாமல் 'என்றல் இனிது' என்றலால், அவன் புறங்கூறாமையை உணர்ந்திருக்க வேண்டிய மக்கள் உணர்ந்திருப்பதைப் புலப்படுத்தினார், என்க. அவன் புறங்கூறாமையால் நன்மை பெறுபவர் பொது மக்களாகலின், அவர்கள் அவன்மேல் கொண்ட கருத்தை ஏற்பிசைவாக (அங்கீகரித்தலாக) இங்கு உணர்த்தினார், என்க.

6. 'புறங்கூறாமை’ என்பது பிற அறவுணர்களினும் நன்மை பயப்பது என்பதை உணர்த்துவதால், இது முதலில் வைக்கப்பெற்றது, என்க.


க.அ.உ, அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. - 182

பொருள்கோள் முறை : -

புறன்அழீஇப் பொய்த்து நகை,
அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே.

பொழிப்புரை : புறத்தே ஒருவனுக்குள்ள பெருமைகளை அழித்து விடுமாறு, அவனைப் பற்றிப் பிறரிடம் புறங்கூறுவதும், பின் அவனைக் கண்ட விடத்துப் பொய்யாக அவனுடன் நகையாடி உறவாடுவதுமான செயல், அறவுணர்வை அழித்து, அறமல்லாத செயல்களைச் செய்வதைவிடத் தீமையானது.