பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அ-2-15 புறங்கூறாமை -19சில விளக்கக் குறிப்புகள் :

1. புறன் அழீஇ - புறத்தே ஒருவனுக்குள்ள பெருமைகளை அழித்து விடுமாறு, அவனைப் பற்றிப் பிறரிடம் புறங்கூறுவதும்.

- புறன் அழீஇ - புறன் அழித்து.

‘புறன்' என்பது புறத்தே உள்ள நிலையைக் குறித்தது. ‘அழித்து' என்னும் சொல் சேர்ந்த பின், அதிகாரப் பொருளால், புறங்கூறுவதும், அதனால் முன்னிருந்து அழித்தல் முயற்சியும், அழிக்கப் பெற்ற பெருமைநிலையும் வருவித்துக் கூறப்பெற்றன.

2. பொய்த்து நகை - (புறம் பேசப் பெற்றவனைப்) பின்னர்க் கண்ட விடத்துப் பொய்யாக அவனுடன் நகையாடி உறவாடுவதுமான செயல்.

‘புறனழீஇ' என்னும் முன் கருத்தைத் தொடர்ந்ததால், இத்தொடரின் கருத்து விரிவும் வருவிக்கப் பெற்றது.

நகை - என்றது, நகைத்து உறவாடுவது என்பது குறித்தது.

3. அறன் அழீஇ - அறவுணர்வை அழித்து.

'அழீஇ' என்பது ஈரிடத்தும் வந்த சொல்லிசை அளபெடை

4. அல்லவை செய்தலின் தீது - அறமல்லாத செயல்களைச் செய்வதை விடத் தீமையானது.

அல்லவை - அறம் அல்லாத செயல்கள்.

செய்தலின் தீது - அவற்றைச் செய்வதைவிடத் தீமையானது.

5. புறத்தே ஒருவனுக்குள்ள பெருமைகளை அழித்துவிடுமாறு அவனைப் பற்றிப் பிறரிடம் புறங்கூறுவது தீதாயிற்று.

இனி, அதைவிட, புறஞ்சொல்லப் பெற்றவனை மீண்டும் காணுங்கால், அவனுக்குத் தான் தீமை செய்து வருதலை மறைத்து, அவனொடு தான் பொய்யாக நகையாடி, உறவாடுவது போல் நடிப்பது அதனினும் தீதாயிற்று.

முன்னர், செய்த தீது புறங்கூறுவது மட்டுமே. பின்னர்ச் செய்யும் தீது, அவனிடம் தான் அவனுக்கு மாறான செயலைச் செய்து வருவதை மறைத்து நிற்பது ஒரு தீது, அவ்வாறு மறைத்து, மீண்டும் அவனிடம் ஒன்றும் அறியாதவனைப் போல் வஞ்சகமாக பொய்யாக நகைத்து உறவாடுவது போல் நடிப்பது இன்னொரு தீது.

இவ்வாறு, மறைத்து ஒழுகுதலும், பொய்யாய் வஞ்சகமாய் நகைத்து உறவாடுவதும் ஆகிய இரண்டு அறக் கேடுகளைக் கொண்டதால்,