பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

23


இது முன்னர்ச் செய்த புறங்கூறியதான ஒரு தீமையைவிட மிகுந்த தீமையாயிற்று என்றார்.

6. முன்னைய குறளில், அறமல்லாதவற்றைச் செய்தலின், புறங்கூறான் என்றல் இனிது என்றவர், இதில், அதற்கு மறுதலையாக, அறமல்லாதவற்றைச் செய்வதினும், புறங்கூறிப் பொய்த்து உறவாடல் தீது என்று கூறியதால், அதன் பின் இது வைக்கப் பெற்றது.


க.அ௩. புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும். - 183

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை : ஒருவனைப் பற்றிப் புறத்தே போய் இழிவானவற்றுடன் பொய்யையும் கலந்து கவர்ச்சியாகக் கூறி, அதனால் பெறும் சில ஊதியங்கள் கொண்டு உயிர் வாழ்தலை விட, அவன் இறந்து போதல், அந்த அறக்கேட்டைச் செய்யாததால் வரும் பொதுவான அறப் பயன்களை இயல்பாக அவன் உயிர்க்குத் தரும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - ஒருவனைப் பற்றிப் புறத்தேபோய் இழிவானவற்றுடன் பொய்யையும் கலந்து கவர்ச்சியாகக் கூறி, அதனால் பெறும் சில ஊதியங்கள் கொண்டு உயிர்வாழ்தலைவிட

- ‘புறங்கூறிப் பொய்த்து' - என்பதற்குப் பரிமேலழகர், முன்னைய குறளில் கூறியவாறே, 'பிறனைக் காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கினியனாகப் பொய்த்து' என்றும்,

. மணக்குடவர், 'காணாவிடத்துப் புறஞ்சொல்லிக் கண்ட இடத்துப் பொய் செய்து' என்றும்.

- பாவாணர், 'ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி, அவனைக் கண்ட விடத்து நல்லவனாக நடித்து' என்றுமே கூறுவாராயினர்.

- பொய் கூறுதல், புறஞ்சொல்லப் படுவானிடத்திலேயே நிகழ்வது முன் குறளில் கூறப் பெற்றதாகலின், இதனினும் அதே பொருள் கூறுதல், ‘கூறியது கூறல்' என்னும் குற்றமாகிவிடுதலைக் காண்க

- புறங்கூறுவான், புறங்கூறப்பெற்றவனிடத்துப் பொய்யாக நகையாடுதலும், புறங் கூறுபவர்களிடத்துப் பொய் மிடைந்து கூறுவதும் ஆகிய, இருவகையானும் பொய்யாக நடப்பது இரண்டு குறள்களினும்