பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

25- தீமைக்கு, முன் பிறவியையும், நன்மைக்கு மறுமையையும், காரணங்களாக்குவது வேதமதத்தவரின் ஒரு பெரிய ஏமாற்றுக் கோட்பாடு என்க.

- இம்மை, மறுமை ஒர் உயிரியல் கோட்பாடு எனில், மாந்த உயிர்களை மட்டுமே அக்கோட்பாட்டுக்கு உரியனவாகப் பொருந்தும்படி கூறுதல், அறிவுடைமை ஆகாது.

- ஒர் உயிரியல் கோட்பாடு எனில், அஃது உலகின் கண் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொருந்தும்படி இருத்தல் வேண்டும்.

- நன்மை தீமை செய்தல், (புண்ணிய பாவம் ஏற்படல்) அவற்றால் இம்மை மறுமையில் ஆக்கமும் தாக்கமும் ஏற்படல் என்பது, விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனவற்றிற்கும், நீந்துவனவற்றிற்கும் உண்டு என்பது பற்றி அவர்கள் கொள்கை தெளிவாக இல்லை. அவர்களுக்கு வேண்டாதவர் - மாறானவர் - அல்லது வேறு 'வருண'ப் பிரிவினர் ஆயின் அவ்ர்களுக்கு ஒரு 'பாவ, புண்ணிய'க் கோட்பாடு. அவர்கள் இனத்தவராயின் வேறு ஒரு கோட்பாடு, கற்பனை செய்வதிலும் கூட ஓர் அறிவுடைமையோ, பொருந்தப் புளுகுவதோ அவர்கள் நூல்களுள் இல்லை என்பதற்கு இவ்வேற்றத் தாழ்வான உயிரியல் நெறிமுறைகளே சான்று.

- இனி, ஒருவன் உயிரோடு இருந்தபொழுது கடைப்பிடித்து ஒழுகிய அறக்கோட்பாட்டிற்கு, அவன் இறந்த பின்னை ஏற்படும் ஆக்கத்தான் என்னெனில், அவன் பெறும் நற்புகழே. இப் புகழ் உடலொடு இருக்கும் போதாயினும், உடல் மாய்ந்த பின்னாயினும் உயிரைச் சார்ந்தே இருக்கும் என்பது ஆசிரியர் கருத்தாம் என்க. அத்துடன் புகழ்பெறுதலே அறப்பயன் என்றும் அறிக. என்னை?

‘அறத்தால் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல’ - 39
‘ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்’ - 156
‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு’ - 231
‘உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்’ - 232
'தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று' - 234