பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

31



கஅ௭. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர் - 187

பொருள்கோள் முறை :

நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்.

பொழிப்புரை : ஒருவருக்கொருவர் நகைத்துப்பேசி மகிழும்படியான நட்பாடுதலைத் தெளிவுற அறியாதவர், அவர்கள் வேறுபட்டுப் போகும்படி புறங்கூறி நண்பர்களைப் பிரிப்பர்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - ஒருவருக்கொருவர் நகைத்துப்பேசி மகிழும்படியான நட்பாடுதலைத் தெளிவுற அறியாதவர்.

நகச்சொல்லி நட்பாடல் - ஒருவர்க்கொருவர் நகைத்துப் பேசி மகிழும்படியாக நட்பாடுதலை,

தேற்றாதவர் - தெளிவுற அறியாதவர்.

தேறுதல் - தெளிவுற அறிதல்.

- தன்னொடு அவரும், அவரொடு பிறரும் ஆக, ஒருவர்க்கொருவர் நகைத்துப் பேசி மகிழும்படியாக நட்பாடுதலைத் தெளிவுற அறியாதவர்.

‘களவல்ல மற்றைய தேற்றா தவர்’ . - 289
'பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்’ – 649

- 'தேறாதவர்' என்னும் தன்வினைச்சொல் 'தேற்றாதவர்' என்னும் பிறவினை வடிவில் வந்தது.

- நட்புச் செய்தலுக்கு அடிப்படையே ஒருவர்க்கொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கருத்துப் பரிமாறிக் கொள்ளுதல். என்னை?

'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு’ - 786
'நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்' - 999

- என்பார் ஆகலின்,