பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அ-2-15 புறங்கூறாமை -19


- மேலும், வேண்டாதார் இகல் உள்ளவரும், பகைவர் பகையுள்ளவரும் ஆகையால், அவர்தம்மை இவர் புறந்துாற்றின் இகல் மிகுந்து பகையும், பகை மிகுந்து பழியும் நேரும் என்க. அதனால் அவரைப்பற்றி இவர் வாய் திறவார், எல்லை கடந்தாரும் ஆகலின்,

மாட்டு - இடத்து.

இங்குத் தன்நிலை குறித்தது.

- இங்கு மாட்டு என்பதுடன் செய்வது என்னும் சொல் சேர்த்து, 'அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ' என்று கூறி, 'செய்வது' சொல்லெச்சம் என்று முடிப்பர், பரிமேலழகர், அச் சொல்லும் விரிவும் தேவையல்ல.

என்னை கொல் - என்னபடி நடந்து கொள்வாரோ?

கொல் - ஐயம்

என்னவும் செய்யத் தயங்கார் என்று கூறி முடிக்க.

4. முன்னதில், நண்பர் வழிக் குற்றம் நிகழ்தலைக் குறித்தவர், அதைத் தொடர்ந்து, நண்பர் அல்லாத அயலார்வழி அக்குற்றம் நிகழ்வது பற்றிக் கூறுதலால், அதன்பின் இது வைக்கப்பெற்றது, என்க.


கஅக. அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை - 189

பொருள்கோள் முறை :

புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான்
பொறை, வையம், அறன்நோக்கி ஆற்றும்கொல்.

பொழிப்புரை : புறத்தில் உள்ளவர்களைத் தேடிச் சென்று, பிறரைப் பற்றிப் புல்லிய சொற்களால் பழி கூறுவானின் உடல்சுமையை, இவ்வுலகம், பொதுமையறம் கருதிப் பொறுத்துக் கொள்ளுமோ?

சில விளக்கக் குறிப்புகள்:

1. புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - புறத்தில் உள்ளவர்களைத் தேடிச் சென்று, பிறரைப் பற்றிப் புல்லிய சொற்களால் பழிகூறுவானின் உடல் சுமையை