பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

35


'புறன்நோக்கி' - என்பதற்கு உரையாசிரியர் சிலர் 'பிறர் இல்லாத இடம் நோக்கி' என்பர். அதனினும் 'புறத்தில் உள்ளவர்களைத் தேடிச் சென்று' என்னும் பொருளே பொருந்துவது.

புன்சொல் - புல்லிய சொல்.

- கீழ்மையான சொற்கள்.

பொறை - சுமை, கனம், பாரம்.

- புன்சொல், உரைப்பானை நிலத்துக்குப் பொறை - சுமை என்றது, அவனால் உலகிற்குக் கேடாதலின் என்க.

-இவ்வாறு நிலத்துக்குப் பொறையாக - சுமையாக - உள்ளவர்கள் பலரை ஆசிரியர் ஆங்காங்கே சுட்டுவார்.

‘கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை’ - 570
‘கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை’ - 572
‘சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை’ - 990
'இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை' - 1003

2. வையம் அறம் நோக்கி ஆற்றும்கொல் - இவ்வுலகம் பொதுமையறம் கருதிப் பொறுத்துக் கொண்டுள்ளதோ?

வையம் - உருட்சியால் உலகம் வையம் எனப்பெற்றது. அறம்நோக்கி - பொதுமையறம் கருதி.

- பொதுமையுணர்வே அறம் எனப்பெறுவது.

(காண்க : அறன்வலியுறுத்தல் அதிகார முன்னுரை)

- பொதுமையறம் வேறுபாடு கருதாத சமநிலை உணர்வு.

- ஒப்புரவு - ஒத்தது அறிதல் (214)

- பல்லுயிர் ஒம்புதல் (322)

- மேலும் உலகம் கண்ணோட்டம் இரக்கம் என்னும் அறவுணர்வு உடையது. அதனால், எத்தகையவர் மேலும் இரக்கம் கொள்ளும் தன்மை கொண்டது என்பார், நூலாசிரியர்.

(அஃதாவது, உலகியலின் தன்மையை உலகின் மேல் ஏற்றிக் கூறுவார்)

‘கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு' - 571