பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அ-2-15 புறங்கூறாமை -19


‘கண்ணோட்டம் உள்ளது உலகியல்’ - 572

- அக் கண்ணோட்ட அறம்கொண்ட அறம் நோக்கிப் புன்சொல் உரைப்பாரையும் உலகம் பொறுத்துக் கொண்டுள்ளதாகக் கூறுவர், ஆசிரியர்.

- இரக்கம் மனத்தின்கண் தோன்றும் உணர்வெனினும், அது கண்ணினால் கண்டு, உணரப்பெறுவதாகலின் 'கண்ணோட்டம்' எனப் பெற்றது.

கண் ஒடுதல் - கண்ணோட்டம். அது துன்புற்றார் மேல் பாய்தல்.

- இரக்கம் பொதுமை உணர்வு என்க. அஃது புறஞ்சொல்வானின் அறியாமைமேல் செல்லுவது.

- புறஞ்சொல்வான் அறியாமையால் அதுசெய்வான்,

என்று முன்னர்க் கூறினார் (187)

4. இது, மாந்தரால் பொறுக்கவியலாத குற்றத்தை உலகு பொறுத்தது என்னலால், இங்கு வைக்கப் பெற்றது.


க௬ 0. ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு - 190

பொருள்கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை : பிறருடைய குற்றங்களை ஒருவன் புறம் நோக்கிக் காணுவது போல், தன்னுடைய குற்றங்களையும் அவன் அகம் நோக்கிக் காணுவானாயின், இங்கு வாழ்கின்ற மக்கள் உயிர்களுக்குத் தீமை நேர்வதுண்டோ? நேராதாம்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. இக்குறள், இவ்வதிகாரப் பொருளாகிய, புறங்கூறுதலையும், அது நிகழ்வதற்கான காரணத்தையும், அது நிகழாதிருப்பதற்குரிய வழியையும், அவ்வாறு நிகழாமல் இருந்தால் உலகின் மக்களுயிர்கள் துன்பப்பட வேண்டியிரா என்னும் முடிபையும் ஒருங்கே சுருக்கவிளக்கமாகக் கூறுகிறது. இது மக்கள் மனவியல்படி (Social Psychology) கூறப் பெற்றுள்ள ஓர் உண்மையாகும்.

2. இக்குறள்வழி ஐந்து வகையான உண்மைகள் உணர்த்தப் பெறுகின்றன.

ஒன்று, உலகில் உள்ள மக்கள் அனைவருமே குற்றங்கள் செய்கின்றனர் - என்பது.