பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

அ-2-15 புறங்கூறாமை -19


'அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்’ - 980

- என்பார், என்க.

‘தங்குற்றம் நீக்கலர் ஆகிப் பிறர்குற்றம்
எங்கெங்கும் நீக்கற் கிடைபுகுதல் - எங்கும்
வியன்உலகில் வெள்ளாடு தன்வலி தீராது
அயன்வலி தீர்த்து விடல்’ - பழமொழி: 124

‘பிறர்குற்றம் கூறுதல் தேற்றாதோன்' - கலி:43 : 18

- என்றார் பிறரும்.

6. தீதுண்டோ மன்னும் உயிர்க்கு - இங்கு வாழ்கின்ற மக்கள் உயிர்களுக்குத் தீமை நேர்வதுண்டோ? (நேராதாம்).

தீதுண்டோ - தீமை நேர்வதுண்டோ என்றலின் நேராதாம் என முடிவு கூறப்பெற்றது.

மன்னும் உயிர்க்கு - இங்கு வாழ்கின்ற மக்கள் உயிர்களுக்கு மன்னும்நிலைபெறும். இங்கு நிலைபெற்று வாழும்.

- பலவகையான உயிர்கள் இந் நிலவுலகில் பிறந்து இல்லாமற் போயிருக்க, மாந்த உயிர்கள் மட்டும் தோன்றி நிலைபெற்று வாழ்கின்றன என்க.

- 'மன்னும் உயிர்க்கு' என்பதற்குப் பரிமேலழகர் நிலை பேறுடைய உயிர்க்கு என்று பொருள் கொண்டு,

‘வரும் பிறவிகளினும் துன்பமில்லை' என்பது நோக்கிக் கூறியதாகக் கூறுவர்.

- 'மன்னுயிர்’ என்று வினைத் தொகையாக வரும்பொழுது நிலைத்த உயிர் என்று பொருள் கொள்வது பொருந்தும்.

- இங்கு 'மன்னும் உயிர்' என்று நிகழ்காலம் குறித்துக் கூறப்பெற்றதாலும் இடம் நோக்கியும், 'வாழ்கின்ற நிலைபெற்ற உயிர்கள்' என்று கொள்வதே பொருந்தும் என்க.

- 'உடல்நில்லா தொழியவும் உயிர் நிலைபெற்று நிற்றலால் மன்னுமுயிர் என்றார்' - என்று பாவாணர் கூறுதற்கும் இதுவே விளக்கம் என்க.

7. இஃது, இவ்வதிகாரப் பொருளுக்கு முடிவான பொருள் விளக்கம் தருதலால், ஈற்றிலும், முன்னதன் பின்னும் நிரல்பட்டது, என்க.