பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

41



‘ஒளவியம் பேசேல்’ (பொறாமை)

‘சித்திரம் பேசேல்’(பொய், புனைவு)

‘சுளிக்கச்சொல்லேல்' (அருவருப்பானவற்றை)

‘சொல் சோர்வு படேல்’ (தவறாக, பொருத்தமின்றி)

‘நொய்ய உரையேல்' (இழிவானவற்றை, புல்லியவற்றை)

 'பழிப்பன பகரேல்' (பழிக்கத்தக்கவற்றை)

 ‘பிழைபடச் சொல்லேல்’ (தவறு வரும்படி)

‘மிகைப்படச் சொல்லேல்' (உள்ளதைப் பெருக்கி)

 ‘வல்லமை பேசேல்' (தருக்கி)

 ‘வெட்டெனப் பேசேல்' (முகம் முரித்தல் போல்)

‘ஒரம் சொல்லேல்’ (வஞ்சகம்)

- இவை ஒளவையாரின் 'ஆத்திசூடி' உரைகள் 'பயனில சொல்லாமை’ குறித்தவை.

‘ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு’ - 12

'கோள்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு' - 24

'கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை’ - 25

(கெளவை - குற்றங்களைத் தூற்றிப் பேசுதல்)

‘நைபவர் எனினும் நொய்ய உரையேல்’ - 56

- இவையும் ஒளவையாரின் 'கொன்றை வேந்தன்' கூற்றுகள்.

 ‘கல்விக் கழகு கசடற மொழிதல்’ - வெற்றிவேற்கை: 2

 ‘தண்காமம், பொய், வெகுளி, பொச்சாப்பு, அழுக்காறு
என்று ஐந்தே கெடுவார்க்கு இயல்பு என்ப' - அறநெறிச்சாரம்:165

 ‘பொய், குறளை, வன்சொல், பயனில - என் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யில்
புலம்ஐந்தும் காத்து மனம்மாசு அகற்றும்
நலம்அன்றே நல்லாறு எனல்’ - நீதிநெறி விளக்கம்:50


 ‘காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லும்சொல்
ஒவாதே தம்மைச் சுடுதலால் - ஒவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து’ - நாலடி: 63