பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

47


‘பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு - 984

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி’  - 995

‘இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்’ - 1044

'நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்’ - 1046

‘அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான்’ - 1076

- இனி, புறங்கூறுதல் உணர்வு உடையவரே, பயனிலசொல்லும் அறியாமை உணர்வுடையவராக இருப்பார் ஆகலினாலும் பெரும்பாலும் ஒருவரோடு ஒருவர் உரையாடுதல் மனமகிழ்வுக்கும், அறிவு வளர்ச்சிக்கும், செயல்துண்டலுக்குமே ஆகலானும் இவ்வதிகாரம், புறங்கூறாமை அதிகாரத்தின் பின்னும், பயனில சொல்லுதல் தீவினைக்கும் அடிகோலுதல் பற்றித் தீவினையச்சம் அதிகாரத்திற்கு முன்னும் வைக்கப் பெற்றது என்க.


க௬ க. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் - 191

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை : பல தரத்தினருள்ளும் பெரும்பான்மையரால் வெறுக்கும்படி, சொல்லாலும் பொருளாலும், அவனுக்கும் பிறர்க்கும் பயனில்லாதவற்றைச் சொல்லித் திரிபவன் இறுதியில், எல்லாராலுமே இழிவாகப் பேசப்படுவான்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) பல்லார் முனிய: பல தரத்தினருள்ளும் பெரும்பான்மையரால் வெறுக்கும்படி பல்லார் என்றது, பலதரத்துள்ள மக்களை. பலர் என்றதால் அவனைப் போலவே உள்ள சிலர் அவனை வெறுக்காமல் விரும்பவும் செய்குவர் என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் என்க. என்னை? - மக்கள் அமைப்பில் உள்ள பலதரத்தினருள்ளும் அனைவருமே பயனில சொல்லுவானை வெறுத்தல் இயலாது. அவருள் சிறுபான்மையர் அவனை விரும்பவும் செய்யலாம். எல்லாருமே வெறுப்பதாயின் அவன் பயனில சொல்லுதல் யாரிடம் நேரும்? எனவே, அவனைப் போலவே மனப்பான்மை உள்ள ஒரு சிலராகினும் அவன் சொல்லும் ஆரவார, இழிவான, அல்லது பொய்யான சில செய்திகளை விரும்பிக் கேட்கவே செய்வர். இக்குமுகாய உளவியல்