பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அ-2-16 பயனில சொல்லாமை 20


காணப்படுகிறது.

'புறஞ்சொல்லும் புன்மையால் காணப்படும்’ - 185

‘புறம் நோக்கிப் புன்சொல் உரைப்பான்' - 189

இத்தவறான உணர்வு பரவுதல் மக்கள் அமைப்புக்குக் கேடாக முடிகிறது.

2) பயனில்லாதவற்றைச் சொல்லுகின்ற உணர்வால் இழிவுணர்வு பரவுகிறது. அறிவுணர்வு கெடுகிறது. மக்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கத்தக்க வுணர்வு தோன்றி வளர்கிறது. இவற்றால் குமுகாயச் சமநிலை கெடுகிறது.

- இத்தகைய கேடுகள் தனிப்பட்ட ஒருசிலர்க்கு நேரும் கேடுகளைவிட குமுகாயத்தையே சீர்குலையச் செய்வதால், பல்லார்முன் பயனில சொல்லல், நட்டார்கண் நயனில செய்தலைவிடத் திதாகிறது என்க.

3) இஃது எல்லாராலும் எள்ளப் படுவானாகிய பயனில சொல்வானின் குமுகாயக் கேடுகளைக் கூறுதலால், முன்னதன் பின் வைக்கப் பெற்றது.


க௬ ௩. நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை - 193

பொருள்கோள் முறை:

பயன் இல பாரித்து உரைக்கும் உரை,
நயனிலன் என்பது சொல்லும்.

பொழிப்புரை: பயனில்லாதவற்றை ஒருவன் விரிவாக எடுத்துப் பேசும் உரையே, அவன் யாருக்கும் நன்மையாக இல்லாதவன் என்பதை உணர்த்தி விடும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1)பயன் இல பாரித்து உரைக்கும் உரை : பயனில்லாதவற்றை ஒருவன் விரிவாக எடுத்துப் பேசும் உரையே.

பாரித்து : பரவலாக, விரிவாக

உரைக்கும் உரை: எடுத்துப் பேசும் உரையே.

2) நயன் இலன் என்பது சொல்லும் : அவன் யாருக்கும் நன்மை இல்லாதவன் என்பதை உணர்த்திவிடும்.

நயன் - இவ்விடத்தில் நன்மை என்று பொருள்.