பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

59


சொல்லாமலிருப்பது நல்லது. (அது தீது பயக்கும்).

சில விளக்கக் குறிப்புகள்:

1) சான்றோர் நயனில சொல்லினும் சொல்லுக :

அறிஞர், பிறர்க்கு விருப்பமிலாதவற்றை ஒருகால் சொல்லினும் சொல்லுக (அது தீது பயவாது).

சான்றோர் : சான்றாண்மை உடையவர். அறிவினும் பண்பினும் ஒழுக்கத்திலும் சிறந்தவர் அறிஞர்.

(இச் சொல்லின் விரிவான விளக்கத்தைக் குறள் 118இன் விளக்கக் குறிப்பில் காண்க).

நயனில : இங்கு விருப்பமிலாதவற்றைக் குறித்தது. நயத்தல் - விரும்புதல்.

- பரிமேலழகர் இங்கு, 'நீதியோடு படாத சொற்கள்' என்றும், - பாவாணர், 'நேர்மையில்லாத சொற்களை' என்றும் பொருள் தருவர். அவை இருபொருளும் சான்றான்மைக்கே இழுக்காம் ஆகலின் அவை கூடாவாம் என்க. அறிவுடையார், ஒருகால் கேட்பவர்க்கு விருப்பமில்லாதவாறு சொல்லாலும் பொருளாலும் கவர்ச்சியில்லாதவற்றைப் பற்றியும் கூறநேரலாம் ஆகலின் அப்பொருளையே கொள்வது பொருத்தம் என்க.

- சொல்லினும் - சொல்ல நேர்ந்தாலும் சொல்லாமை குறித்தது.

- சொல்லுக: (எனினும்) சொல்லுக, சொல்லலாம்.

- சொல்லுக என்றலால் தீங்கு குறியாமை வருவிக்கப் பெற்றது.

2) பயனில சொல்லாமை நன்று : (ஆனால்) , பயனில்லாதவற்றைச் சொல்லாமலிருப்பது நன்று.

சொல்லாமை நன்று - என்றதால் தீங்கு குறித்தமை வருவிக்கப் பெற்றது.

3) நயனில் சொல்வதால், கேட்பவர் விரும்பாவிடினும், அதைக் கேட்டலால் தீங்கு நேராத தன்மை விளங்கிற்று. ஆனால் பயனில சொல்வது, கேட்பவர்க்கு, யாதானும் ஒருவகையில் தீங்கு நேருமாகையால் அதனைச் சொல்லாமை நன்று என்றார்.

4) இஃது அறிவோர் பயனில சொல்லாமை வேண்டும் என்று குறித்தது.