பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அ-2-16 பயனில சொல்லாமை 20



3) மனமயக்கம் தீர்ந்த, மாசற்ற அறிவுடையார், பயன் இல்லாத எந்தச் சொல்லையோ பொருளையோ பிறரிடத்து மறந்தேயும் சொல்லார் என்றது. அவர்க்குச் சொல்லால் அதன் பொருளால் வரும் குற்றங்கள் தெரியுமாகலானும், மனமயக்கம் நீக்கியதால், அறிவுக்குற்றம் இல்லாதவராக இருப்பதாலும் மறதி வராது ஆகையினாலும், பொருளில்லாதவற்றைப் பேசார் என்பது இயல்பாயிற்று என்க.

4) இது, அரும் பயன் ஆயும் அறிவினார்க்குமேல், மனமயக்கமும், அறிவுக்குற்றமும் இல்லாதவரின் இயல்பு கூறி, அவர் மறந்தும் பயனில்லாதவற்றைக் கூறார் என்றதால், அதனை அடுத்து நின்றது,


௨00. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல். - 200

பொருள்கோள் முறை:

சொல்லில் பயனுடைய சொல்லுக
சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க.

பொழிப்புரை: சொல்லுவதில், பயனுடைய சொற்களையே தேர்ந்து சொல்லுக சொற்களிலும் பொருள்களிலும் தனக்கும் பிறர்க்கும் பயனில்லாதவற்றைச் சொல்லுதலைத் தவிர்க்க.

சில விளக்கக் குறிப்புகள் :

1) சொல்லில் பயனுடைய சொல்லுக: சொல்லுவதில் பயனுடைய சொற்களையே தேர்ந்து சொல்லுக.

பயனுடைய சொல்லுக: என்ற மட்டில் பொருள் நிறைவு பெறுமாயினும், சொல்லில் என்பது மிகையாகக் குறித்தாரோ எனில், அஃதன்று. சொல்லுதல் கருத்தை வலியுறுத்துவான் வேண்டி, அதனை இரட்டித்தார் என்க. அது மிகையன்று.

தேர்ந்து என்பது சொல்லில் என்பதற்கு வந்த கூடுதல் பொருள்.

2) சொல்லில்,பயனில்லாச் சொல் சொல்லற்க: சொற்களிலும் பொருள்களிலும் தனக்கும் பிறர்க்கும் பயனில்லாதவற்றைச் சொல்லுதலைத் தவிர்க்க.

- இங்கும் சொல்லில் என்று மிகையாகக் கூறியதன்று. வலியுறுத்தமே.

- பயனில்லாச் சொல் சொல்லுதலைத் தவிர்க்க, விடுக்க