பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

77



4) இதன்வழி, தீவினையைத் தொடர்ந்து செய்வதற்குக் காரணம், அதிற் பழக்கப்பட்டு, உள்ளமும் உடலும் செருக்குப் பெறுவதே என்றும், தீவினை செய்ய அஞ்சுவதற்குக் காரணம், மேன்மையான உள்ளம் பெற்றிருப்பதே ஆகும் என இருவகை அடிப்படை உணர்வுகளை உணர்த்தினார் என்க.


உ0உ. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். - 202

பொருள்கோள் முறை: இயல்பு.

பொழிப்புரை : தீய செயல்கள் (செய்தவர்க்கும் செய்யப்பட்டவர்க்கும்) தீயவற்றையே விளைவித்தலால், தீய எண்ணங்கள் தீயைவிட அஞ்சப்படுதல் வேண்டும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1)தீயவை - தீய செயல்கள்.

- இவ்விடத்துச் செயல்களையும், பிறிதிடத்து எண்ணங்களையும் குறித்தது.

- இரண்டும் ஒன்றையே குறித்தலென்பது மிகையாம்.

- தீய பயத்தலால் : தீயவற்றையே விளைவித்தலால்.

- பயத்தல் என்னும் சொல்லால் பயக்கப் பெற்றவர். வருவிக்கப் பெற்றார்.

- தீயவே என்னும் ஏகாரம் செய்யுள் நோக்கித் தொக்கது.

- இவ் வேகாரத்தைப் பாவாணர், முதல் சொல்லின் ஐகாரத்துக்குப் பகரமாக ஏற்றிப் பாடம் கொண்டார்.

2) தீயவை தீயினும் அஞ்சப்படும் : தீய எண்ணங்கள் தீயை விட அஞ்சப்படுதல் வேண்டும்.

தீயவை - இங்கு எண்ணங்களைக் குறித்தது.

- பரிமேலழகரும் பிறரும் இரண்டிற்கும் தீயசெயல்கள் என்று ஒரே பொருளைக் கொண்டனர்.

- தீயவை, தீயை விடக் கூடுதலான தீமைகளைத் தருதலால், அவை தீயைவிட அஞ்சப்படுதல் வேண்டும் என்றார் என்க. என்னை?

1) தீ, நெருங்கியவர்க்கே தீங்கு செய்யும் - தீமை நெருங்காதவர்ககும் எட்டச் சென்று தீங்கு செய்யும்.