பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வெளியீட்டுரை

தமிழ்மரபுரையும், எமக்கு ஒரு சிறிதும் நிறைவளிக்கவில்லையெனின், பிறர் பிற உரைகளெல்லாம் பற்றிக் கூறுதல், வறட் பாறைக்கண் வளந்தேடுதல் போன்றதே! சுருங்கக் கூறுமிடத்து, திருக்குறள் - பரிமேலழகர் உரையே ஒரு பொறுக்கு மணியாக உள்ளது எனலாம். ஆனால், அவரின் இன, மதக் காப்புணர்வாலும், தமிழறக் காழ்ப்பெரிவாலும், மூல விடங்களிலெல்லாம் பெய்து போகிய ஆரியப் பார்ப்பனியச் சார்புரைகளாலும், அவர் பழிக்கப்பட வேண்டிய அல்லது கண்டிக்கப்பட வேண்டிய ஒருவராகவே உள்ளாரேயன்றி, அவர் கண்டு காட்டிய உரையூற்றம் இல்லாமற் போமாயின், திருக்குறள் மணியின் முழு ஒளிச் சிதறலையும் உலகம் உணர்ந்திராது என்னும் உண்மையை யாரும் மறைத்தோ மறுத்தோவிடற்கியலாது. எனினும் பரிமேலழகர் உரையின் புரைகளைப் பாவாணர் காட்டிய ஒருவகைப் பாங்கு ஒரளவு போற்றுதற்குரியதே என்க. அது, திருக்குறள் நோக்கிற்கே ஒரு திருப்பத்தைத் தந்தது எனலாம். ஆயினும், அவரும் பெரும்பாலான விடங்களில் பரிமேலழகர் பதித்துச் சென்ற காலடிகளின் மேலேயே தம் காலடிகளையும் வைத்துச் சென்றுள்ளது யாவர்க்கும் எளிதே புலப்பட்டு விடும் தன்மையதே.

இனி, பாவாணர்க்கு யாம் தந்த உரைச் சிறப்புப் பாயிரத்துள்,

‘பத்துரைக்கு மேலும் பரிமே லழகரோ(டு)
ஒத்தவுரை நூறுசெய்தும் ஒன்றாமே - மெத்ததிரு
வள்ளுவனார் நூலுக்கு வாய்மை உரைசெய்தார்
தெள்ளுதமிழ்ப் பாவாணர் தேர்ந்து .

- பாடல்: 1.
‘திருக்குறள் தமிழ்மரபுரைச் சிறப்புப் பாயிரம்’.
'தேவநே யன்என்னும் தேர்ந்தமதிப் பாவாணர்
தேவத் திருக்குறட்குத் தீர்ந்தவுரை - மேவியபின்
மற்றோர் உரைசெயவும் மானுவரோ? மானுவரேல்
கற்றோர் நகைப்பர் கலித்து - ‘
- மேற்படிநூல், பாடல்: 10.

என்றோர் உறுதி கூறியிருந்ததும், பின்னர் யாம் மேலும் ஒர் உரையெழுதத் துணிந்ததும், காலத்தால் நேர்ந்த கட்டாயக் கருத்து வெளிப்பாடுகளே! அவ்வெளிப்பாட்டிற்கும்