பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

7

அம்மெய்ப்பொருள் உணர்வே கரணியமாக அமைந்ததெனில், அது புனைவோ பொய்யோ ஆகா தென்க.

இனி, திருக்குறள் பற்றிய பெருமை கூறுகையில், யாவரினும் மேலாகவும் சுருக்கமாகவும், இடைக்காடர்,

‘கடுகைத் துளைத்(து) ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’

- தி.வ.மா: 54.

என்றும், ஒளவையார் அதனினும் நுட்பமாக,

‘அணுவைத் துளைத்(து) ஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்’

- தி.வ.மா: 55.

என்றும் கூறுவர். இங்கு இருவரும் அஃது ஒரு கடல் போன்றது என்று கூறியது எண்ணி வியக்கத்தக்கது. உண்மையிலேயே திருக்குறள் சிந்தனையளவிலும், சொல்லளவிலும் கருத்தளவிலும், காலத்தையும் இடத்தையும் அளாவிப் படர்ந்து விரிந்து கிடக்கும், அறிஞர்கள் கடப்பதற்கு அரிதான ஒரு கடலைப் போன்றதே! அக்கூற்று மிகையன்று அருமையும் பெருமையும் ஒருமையும் மிக்கதே!

அஃது அவ்வாறாயின், அதற்கு உரையெழுதுவது என்பதும், அக் கடலைக் கடைந்து, கருத்து வெண்ணெய் எடுத்து, உண்மை நெய் உருக்குகின்ற அளப்பரும் அருஞ்செயலாகும் என்பதும் உணரத்தக்கதாகும். ஆனாலும் திருக்குறள் கடலில் ஒருவாறு நீந்தியும் மூழ்கியும் ஆழங்கண்டும் அகலம் பார்த்தும், ஆங்குற்ற அணிமணிகளையும், நனி செல்வங்களையும் வாரிக் கொணர்ந்து கரை சேர்ப்பதும், பிறர் அறியக் காட்டுவிப்பதும் மகிழ்விப்பதுமே அத்துறையின்கண் போந்துநிற்கும் அனைத்துப் பேரறிஞரினதும் செய்கையாகும் என்க.

என்னை? அதற்குக் காரணம் அத்தனைச் சுரங்கப் பொருள்கள் அதில் உள. அத்தனை அறிஞர் பெருமக்களும் காலந்தோறும் அச்சுரங்கத்துள் இறங்கி அவரால் இயலும் அணிமணிகளைச் சேர்க்கும் அறிவுப் பணியே இவ்வுலகிற்கு அவர்கள் தரும் செல்வச் சேர்ப்பாகும்; அவர்கள் விட்டுச் செல்லும் திருவறிவு வைப்பாகும்.