பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்

சந்நிதியிலே வீற்றிருக்கின்ற அம்பல விநாயகனே! திருச்செந்திலிலே வாழ்கின்ற முருகனே! சிவந்த கண் களுடையவனான திருமாலின் மருமகனே! கந்தனே! திரு இலஞ்சியிலே கோவில் கொண்டிருக்கின்ற கடவுளே! உனக்கு என் வணக்கங்கள். புள்ளிமான் ஈன்றெடுத்த பூவையே! எம் குறக்குலத்திலே வந்து வளர்ந்த வள்ளி நாயகியே! எழுந்தருளி வந்து எனக்கு நீ உதவாயோ! அப்பனே! மேலவாயிலின் தலைவனாகிய ஐயனாரப்பனே! சொல்லுதற்கும் அருமை யுடைய மலையின்மேல் எழுந்தருளி இருக்கின்ற தேவ கன்னியர்களே! ஆரியங்காவு என்னுமிடத்திலே கோவில் கொண்டிருப்பவனே! அருள் செய்யும் சொரிமுத்தய்யனே! சிறப்புடைய குளத்தூரிலே நிலைபெற்றிருக்கும் சேவகனே! அழகிய மாகாளி அம்மையே! குற்றால நகரின் காவல் தெய்வமே! கால பைரவனே! மிக்க துடிப்பினையுடைய திருமலைக் கறுப்பனே! முன்னோடியாக விளங்கும் முருகப் பெருமானே! வன்னியராயனே! வீரம் பொருந்திய புலியைப் போலப் பாய்ந்து வருகின்ற பன்றிமாடனே எக்கலாதேவியே! துர்க்கையம்மனே! பிடாரியே! சிறப்புமிக்கதொரு குறியினைத் தந்தருளும் பொருட்டாக உங்களையெல்லாம் வேண்டு கின்றேன். நீங்களும் அனைவரும் வந்து என் முன்னே இருந்து உதவுவீர்களாக!

இந்த வசந்தமோகினிப் பெண் தன் சிந்தையிலே நினைந்தது சீவனையோ! தாதுவையோ? வெண்மையான ஆடைகளையோ? பட்டுப் பீதாம்பரங்களையோ? தவச தானிய வகைகளையோ? கலவைச் சாந்தினையோ? புழுகினையோ? களப கத்துாரிகளையோ? வட்டிலோ? செம்போ? வயிரமோ? முத்தோ? கட்டிலோ? மெத்தையோ? கட்டி வராகனோ? புதையலோ? சிமிழில் சேர்த்து வைத்த பொருளோ? வரவோ? செலவோ? இவள் கையிலிருந்த செல்வங்கள் களவு போனதுவோ? குற்றமில்லாத பெண் மையின் பருவத்தினாலே வருகின்ற சிருஷ்டிதோஷமோ? முக்கண்ணனானவர் செய்த சிறிய மயக்கமோ? பிற அரசர்கள்