பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருக்குற்றாலக் குறவஞ்சி - மூலமும் உரையும்

கலிகளும் கதையும் பேசிக் கையிலே ஈட்டி வாங்கி எலிகளைத் துரத்தும் வீரன்

ஈப்புலி நூவன் வந்தான். (அம்புலி, புலி என்று குறைந்து வந்தது. ஈப்புலி - நூவனின் கோமாளித்தனத்தைக் குறிக்கும் கேலிப்பட்டம். புலிகளைத் தாக்கும் வலியவர் நாட்டிலே எலிகளைத் துரத்தும் நூவன் என்று சொல்லும் நகைச்சுவை காண்க.)

ஊர்க்குருவியைப் பிடிக்கின்ற மெல்லிய நெருக்கமான கண்ணியைக் கையிலே வைத்துக் கொண்டு, தன் மனத்திலே உள்ளானையும், வலியானையும் பிடிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டு அதற்குரிய வழிவகைகள் பலவற்றையும் பற்றித் தன்னுடன் வருபவர்களிடம் பேசிக்கொண்டு, பறவைகளைப் பிடிக்கும் தன்மையுடையவனான நூவனும் வந்து கொண்டிருந்தான்.

கரிக்குருவியைப் பிடிப்பதற்குரிய கண்ணியையும் எடுத்துக் கொண்டு கானாங்கோழிகளைப் பிடிப்பதற்கு உரிய பொறியையும் எடுத்துக் கொண்டு, மூங்கில் வில்லினையுடைய குளுவர்களிலே கவண்டன், மல்லன் என்பவர்களைப் போலத் தன்னை எண்ணிக் கொண்டு, விளங்குகின்ற நூவன் என்பவனும் வந்து கொண்டிருந்தான்.

'ஏகனையும் நாகனையும் கூவி அழைத்துக் கொண்டு, எலியனையும் புலியனையும் அதைச் செய் இதைச் செய்’ என்று ஏவிக் கொண்டு தன் தோழனான சிங்கனுடன் உறவாடிக் கொண்டு அழகுள்ள அந்த நூவனும் வந்தான்.

கொட்டகைக்கு நட்டிருக்கும் தூண்களைப் போன்று அவனுடைய கால்கள் தோன்றவும், ஒட்டகத்தைப் போல அவனுடலின் மேற்பாகம் தோன்றவும், கட்டமைந்த உடலினனான திரிகூடன் என்னும் சிங்கனுக்கு முன்பாகக் கள்ளைக் குடித்து ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும் வாயினையுடைய நூவனும் வந்து சேர்ந்தான்!