பக்கம்:திருக்குற்றாலக் குறவஞ்சி-மூலமும் உரையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(i) திருக்குற்றாலக் குறவஞ்சி

புலமை நலம் மிகுந்தோர், உலக நலனே உளம் கருதித் தாம் படைக்கும் படைப்புகளை, இருவகை நோக்கோடும் அமையப் படைத்து அளிப்பார்கள்.

தம்போற் புலமை நலனுடையார் மட்டுமே வியந்தும் நயந்தும் போற்றவேண்டும் எனக் கருதிச் செழுமையுடன் செறிவாகப் படைப்பது ஒரு நோக்கு

உலகத் தமிழினம் எல்லாம் ஒருங்கே கூடி, உவந்து நாடிக் கற்பதற்கேற்றவாறு எளிமையும் இனிமையும் இசைமையும் பொருந்தப் படைப்பது இரண்டாவது நோக்கு.

இவ்வகையில், உலகெலாம் உவந்து வந்து வேண்டிக் கற்றலையே விரும்பிப் பாடியிருப்பது இந்தத் திருக் குற்றாலக் குறவஞ்சி எனலாம். குமரகுருபர அடிகளாரின் மீனாட்சியம்மை குறத்தினைப் போலவே பாடப் பாடப் பாடும் பண்ணும், பாடுவார் மனமும், கேட்பார் நெஞ்சமும் கிளர்ச்சி கொள்ளும் செழுமையுடன் விளங்குவதும் இக்குறவஞ்சியாகும்.

இதனை அருளியவர், பெரும் புலவரும், பல இனிய நறும் செழுந்தமிழ் நூல்களைப் பாடியருளிய செந்நாப் பாவலருமான, மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் பெருமான் அவர்கள்.

ஒளவைப் பெருமாட்டியின் தெள்ளமுதச் செல்வங் களைப் போலவே இக்குறவஞ்சியும், தென்பாண்டிச் சிறுவர் சிறுமியர்க்கெல்லாம் ஏழு எட்டு வயதிலேயே மனப்பாட மாக விளங்கிற்று என்பதே, இதன் ஈடிலாத தமிழ்ச் சுவைக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த வரவேற்பினைக் காட்டப் போதுமானதாகும். ஏடுகளில் எழுதி எழுதிப் பயின்றதுடன், தங்கள் ஆட்ட பாட்டங்களுக்குரிய இசைப் பாடல் களாகவும் இதனையே விரும்பிப் பயன்படுத்தி வந்தனர் பலர்.