பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை



கேட்பார்க்கு வேண்டுவனவற்றைத் தன்னிடம் உண்டாக்கித் தருவது என்னும் பொருளது என்பர்.

'வினை என்பது சஞ்சிதம். பிராரத்துவம், ஆகாமியம் என்னும் மூன்றையும் .

'மத்தமும் மதியமும் வைத்திடும் அரன் என்றது மணம் இன்மையால் எவரும் பயனற்றது என்று விரும்பாத ஊமத்தம் பூவை உன்மத்த மலரை இறைவன் விரும்பிச் சூடி அருளியது. உலகுக்கும் தனக்கும் ஒரு பயனையும் செய்ய இயலாத அற்பராயினும், குற்றம் அற்றவராக இருப்பின் அவரையும் நாம் நம் தலைமேற் சுமந்து காப்போம் என்பதை உலகினார்க்கு உணர்த்தி அவரை உய்விப்பதற்கே என்பர் பெரியார்.

குருபத்தினியைப் புணர்தல், பக்கபாதஞ் செய்தல் முதலிய குற்றம் கொண்ட சந்திரன் தன்னை வந்தடைந்தபோது அவனைத் தலையில் சுமந்து காத்து அருள் செய்தார். தன்னை அடைந்தால் காப்பான் என்பதை உணர்ந்து வந்ததனால் அவனுக்கு மதி என்னும் பேர் தந்தருளினார். இதனால் "இறைவன் திருக்குறிப்பு எத்துணைக் குற்றஞ் செய்து சண்டாளத்துவத்தை உடையராயினும் தன் பிழையை அறிந்து வருந்தித் தன்னைப் புகலென்று அடையில் அவனைத் தலைமேற்கொண்டு இறைவன் காப்பான் என்பதனை உலகு அறிந்து உய்ய வேண்டும் என்னும் 'கருணையினாலேயே சந்திரனைச் சடையிற் சூடி அருளினார்" என்பர் பெரியார். அழகே பிழம்பாக உள்ள இறைவர்க்கு எல்லாப் பொருள்களுக்கும் அழகு அருள்பவர்க்கு, எல்லா அழகையும் உணரும் அறிவாக விளங்கும் இறைவர்க்கு அழகு செய்ய ஒன்றையும் அணிய வேண்டியதில்லை என்பதையும் அறிய வேண்டும்.