இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
46
மணி தன்னைப் புகழ்வது அவனுக்குஎன்னவோ போல் இருந்தது.
“அதெல்லாம் இல்லேடா, மனசிலே நினைக்கிறதை எழுதறேன். அருள்கூட ஒவ்வொரு போட்டிலேயும் ஏதாவது பரிசு வாங்காமல் விடறதில்லையே.”
இனியன் அடக்கமாகப் பதில் கூறினான்.
“இருந்தாலும் எப்பவும் முதற்பரிசு உனக்குத் தானடா கிடைக்குது.” தொடர்ந்து கூறினான் மணி.
“ஏதோ பூவோட சேர்ந்த நாரும் நறுமணம் பெறும்'பாங்க. அதுபோல இனியனோட சேர்ந்திருக்கேன்’ல அதனால ரெண்டாவதோ மூணாவதோ, இல்லாட்டி ஆறுதல் பரிசோ கிடைக்குது.”
இனியன் தன்னைப் பாராட்டும் வகையில் பேசியதற்குப் பதிலளிக்கும் வகையில் தன்னடக்கமாகப் பதில் கூறினான் அருள்.
இனியன் பார்வை மணியை நோக்கிச் சென்றது.
“இந்த ஆண்டு மணிகூட போட்டியிலே கலந்துக்கப் போறான்'டா.”
அருளை நோக்கி வியப்பாகக் கூறினான் இனியன்.