பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

87


எனவரும் அப்பரருள் மொழியும் இங்கு ஒப்புநோக்கற்பாலது. அழுக்கற்றபோதே அக் குழிதூரும் என இயைக்க. அழுக்கு - மனமாசு. தன்னுழைப்பால் தொழில் செய்து வாழ முயலாது பிறர் உழைப்பால் வாழ்குவம் என்று எண்ணித் தமது கருவி கரணங்களைச் செயற் படுத்தாது சோம்பியிருக்கும் பேதைமை. அழுக்கறவே தூராக் குழியாகிய வயிற்றுப் பசியும் எளிதில் தீரும் என்பதாம்.

அக்கினிகாரியம் - தீயோம்பல்

உலகம் நலமுற மழை வளமுண்டாக ஞானம் மிக ஞானச்சுடராகிய இறைவனை வேள்வித்தீயுருவில் வைத்து வழிபடுதல்.

47. ஒண்சுட ரானை யுலப்பிலி நாதனை
ஒண்சுட ராகியென் னுள்ளத் திருக்கின்ற
கண்சுட ரோன் உலகேழுங் கடந்தஅத்
தண்சுட ரோமத் தலைவனு மாமே. (221)

‘சுடர் விட்டுளன் எங்கள் சோதி’ எனப் போற்றப்பெறும் சிவபரம் பொருளே வேள்விமுதல்வன் என்பது உணர்த்துகின்றது.

(இ - ள்) ஒளி தங்கிய சுடராகத் திகழ்பவனும் அழிவில்லாத முதல்வனும் ஒளி திகழுஞ் சோதியாகி என் உள்ளத்துள்ளே எழுந்தருளி யிருக்கின்றவனும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடர்களைக் கண்களாகக் கொண்டு விளங்குபவனும் ஏழுலகங்களையுங் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் தண்ணிய அருள் வாய்ந்த சுடருருவினனும் ஆகிய இறைவன் வேள்வித் தலைவனாகவும் விளங்குகின்றான் எ - று.