பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

திருமந்திரம்


எல்லா வுலகங்களிலும் ஒளி வழங்கும் அண்டவொளியாகத் திகழ்பவன் இறைவன் என்பார் ஒண் சுடரானை என்றார். ‘ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்’ என்பது அப்பர் அருளிச் செயல். உலப்பிலி-கேடிலான். உலப்பிலி யாகிய நாதன். உலகின் கண்ணாகப் புறத்தே ஒளி வழங்கும் இறைவன் ஒளிவீசும் சோதிப்பொருளாய் உயிர்களின் உள்ளத்தே எழுந்தருளி அகவிருள் கடிகின்றான் என்பதனைத் தமது அனுபவத்தால் உணர்த்துவார் ‘ஒண் சுடராகி என்னுள்ளத்திருக்கின்ற கண்சுடரோன்’ என்றார். கண்சுடரோன்-ஞாயிறு திங்கள் தீ என்னும் சுடர்களைக் கண்களாக உடையவன்; அண்டங்களை யெல்லாங்கடந்து அப்பாற்பட்டு நின்று ஞாயிறு முதலியவற்றுக் கெல்லாம் ஒளி வழங்கும் பேரொளிப் பொருள் இறைவனே என்பார் 'உலகேழுங் கடந்த அத் தண்சுடர்’ என்றார். பேரொளியுடையதாயினும் வெம்மையுடையதாய்த் தெறுசுடராகாது அருளால் எவ்வுயிர்களையும் பிறவி வெம்மையைப் போக்கிக் குளிர்விப்பது என்பார் ‘தண்சுடர்’ என்றார். ‘சுடர் விட்டுளன் எங்கள் சோதி’ எனவும், ‘காரொளிய திரு மேனி. . . . . . தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளி’ ‘அண்டமாரிருளூடு கடந்து உம்பர் உண்டுபோலும் ஓர் ஒண்சுடர்’ எனவும் ‘சோதியே சுடரே’ ‘பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடர்’ ‘மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்’ எனவும் வரும் திருமுறைகள் இங்கு உளங்கொள்ளத்தக்கன. இறைவன் நிலமுதலாகிய எண் பேருருவினனாகத் திகழ்வோனாதலின் வேள்வியில் வேட்கப்படுந் தீயாகவும் அதனை வேட்கும் வேள்வித் தலைவனாகவும் திகழும் மெய்ம்மையினை அங்கிவேட்டலாகிய செயலில் வைத்து அறிஞர் உணர்தற்குரியர் என்பதாம்.

அந்தணரொழுக்கம்

அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தை செய் அந்தணர்களுக்குரிய ஒழுகலாற்றினை உணர்த்துவது.