பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

89


48. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர்
வேதாந்த மாவது வேட்கை யொழிந்திடம்
வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. (229
)

அந்தணரியல்பும் அவரால் அணவப்பெற்ற வேதாந்தமாகிய உபநிடதங்களின் முடிந்த பொருட்பயனும் உணர்த்துகின்றது.

(இ-ள்) வேத முடியாகிய மெய்ந்நூற் பொருளைக் கேட்டுணரும் ஆர்வமுடைய வேதியர்கள் அந்நூற் பொருளையுள்ளவாறு கேட்டுணர்ந்த பின்னரும் அவ்வுணர்வின் பயனாக உலகப்பொருள்களில் தாம் கொண்டுள்ள வேட்கையினை விட்டு நீங்கினாரல்லர். வேதங்களின் முடிந்த பொருளாவது, பொருள்கள் மேற்கொண்டுள்ள ஆசையை விட்டொழித்த நிலையேயாகும். ஆகவே வேதசிரப் பொருளை உள்ளவாறு கேட்டுணர்ந்த அந்தணர்கள் அதன் பயனாக ஆசையை அறவே விட்டொழித்தனர் எ - று.

வேதசிரசாகிய உபநிடத மெய்ந்நூல்களைக் கற்பதன் பயன் நிலையற்ற உலகப்பொருள்கள் மேலுள்ள வேட்கையை விட்டொழித்து நிலையுடைய முதல்வன் திருவருளைப் பற்றுதலே யாதலின், வேட்கையை விட்டொழித்தவரே வேதத்தின் முடிபொருளாகிய பிரமப்பொருளை உள்ளவாறுணர்ந்த அந்தணராவர் என்பதாம்.

வேட்கை நீங்காத வேதியர் இயல்பினை,

‘பரித்த செல்வ மொழியப் படருநாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவர்
கருத்தின் ஆசை கரையின்மை கண்டிறை
சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள்’
                                               (சுந்தர-காட்சி-25)