பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

திருமந்திரம்


எனச் சீதையின் நிலையாகக் கம்பர் பாடிய பாடலில் காணலாம் .


49. நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை யந்தணர் காண நுவலிலே. (230)

நூல் சிகை முதலிய புறவேட மட்டும் உடையோர் அந்தணராகார் என்கின்றது.

(இ-ள்) முப்புரி நூலும் சிகையும் அந்தணரியல்பினை விளக்கும் அடையாளமாகுமோ? புறத்தே காணப்படும் நூலானது பஞ்சாகும். சிகை என்பது கேசமாகும். நூலுடைய அந்தணராவார் இன்னர் என அடையாளங் கண்டுணர விளக்கிக் கூறுமிடத்து அவர்க்குரிய நூலாவது வேதசிரமாகிய உபநிடதங்களின் பயிற்சியேயாகும். நுண்ணிய சிகையாவது மெய்ம்மையான ஞானமாகும் எ - று.

கார்ப்பாசம்-பஞ்சு. கேசம்-மயிர், முடி. பிரமமோ-பிரமப் பொருளுணர்ச்சியை உணர்த்துவனவோ? ஒகாரம் எதிர்மறை. உணர்த்தா என்பதாம். ‘நூலுடை அந்தணர் காணும்’ என்ற பாடத்திற்கு, ‘விரிநூலுணர்ச்சியின்றிப் புரிநூல் மட்டுமுடைய பேர் கொண்ட அந்தணரே இவ்வுண்மையைக் கண்டு தெளிவீராக’ எனப் பொருளுரைத்தல் பொருந்தும். புறத்தே காணப்படும் நூலும் சிகையும் அந்தணர்க்குரிய உண்மையான அடையாளங்களாக மாட்டா. இவ்வுண்மையை,

‘கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயிலாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே’