பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

91


எனவரும் திருப்பாடலில் திருநாவுக்கரசரும் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம்.

50. அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச்
சிந்தைசெய் யந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துத லில்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. (234)

மெய்ம்மையான அந்தணர் வாழும் நாடு எல்லா நலங்களும் பெறும் என்கின்றது.

(இ-ள்) அழகிய தண்ணளியை மேற்கொண்ட அருமறை முடிப்பொருளை இடைவிடாது சிந்திக்கும் அருளாளராகிய அந்தணர்கள் வாழும் நாடு ஒருநாளும் கேடுறுதல் இல்லை. அந்நாட்டினை யாளும் வேந்தன் குடிமக்களுக்கு எல்லா நலங்களையும் செய்யும் நற்பண்புடையானாவன். (அந்நாடு அவ்வந்தணர்களால்) காலை மாலையாகிய இருபொழுதும் வேதமுறைப்படி வேள்விகளை இயற்றும் எ-று.

அந்தணர் என்பதற்கு அழகிய தண்ணளியினையுடையார் எனத் திருவள்ளுவர் குறித்த காரணத்துடன் வேதத்தின் அந்தத்தை அணவுவோர் என மற்ருெரு காரணத்தினையும் இயைத்து விளக்கும் முறையில் ‘அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர்’ என்றார். அந்தண்மை பூண்ட அந்தணர், அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க. ‘அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்’ எனவரும் திருக்குறளும் அந்தணர் என்பது அழகிய தட்பத்தினையுடையார் என ஏதுப்பெயராதலின் அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது