பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருள்முறைத் திரட்டு

93


கல்லா அரசன் நெறிமுறையுணராது நல்லோரையுங் கொல்லவும், காலன் முறையுணர்ந்து நல்லோரை அணுகாமையால், காலனை விடக் கல்லா அரசனே மிகவும் கொடியன் என்பதாம். இது கல்லா அரசனுக்கும் காலனுக்குமுள்ள வேறுபாட்டினையுணர்த்துதலின் வேற்றுமை யணி யெனப்படும்.

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து . (551)

என்றார் தெய்வப்புலவரும். காலன் செய்வது ஒரு பொழுதைத் துன்பம். இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம்.

52. நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்
நாடொறும் நாடு கெடுமூட நண்ணுமால்
நாடொறுஞ் செல்வம் நரபதி குன்றுமே. (239)

நாட்டில் தவநெறியை நாளும் ஆராய்ந்து மன்னன் முறைசெய்யாமையால் நாடடையும் கேடு கூறுகின்றது.

(இ~ள்) மன்னவன் நாள்தோறும் தனது நாட்டில் நிகழும் தவநெறிச் செயல்களை நாள்தோறும் ஆராய்ந்து (அந்நெறியினைப் போற்றிக் காக்கும் வகையில்) தனக்குரிய அரசியல் நெறி முறைமையினையும் ஆராய்ந்து நடவானாயின் (அவனால் ஆளப்பெறும்) நாடு நாள்தோறும் (உயிரும் உடைமையும்) கேடெய்தும். (அதுவேயுமன்றி) அறியாமையும் வந்தடையும். மக்கள் தலைவனாகிய அவன் நாள்தோறும் தன் செல்வம் குறைந்து தேய்வுறுவான். எ-று.

இத்திருமந்திரம்.

“நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறு நாடு கெடும்” (558)