பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

திருமந்திரம்


54. ஞான மிலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை
ஞானிக ளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. (242)

போலி வேடத்தாரைத் தக்க ஞானிகளாலே சோதித்து நல்வழிப்படுத்துதல் வேந்தனது கடமையென்கின்றது.

(இ - ள்) மெய்யுணர்வு கைவரப்பெறாதார் மெய்யுணர்வுடையார்க்குரிய சடை சிகை பூணுால் முதலியவற்றை மேற்கொண்டு அகவுணர்வு சிறிதுமின்றிப் புறத்தே மெய்யுணர்வுடைய ஞானிகளைப் போன்று நடித்துத் திரிவராயின் வேந்தன் அன்னோர் செயல்களை மெய்யுணர்வுடைய சான்றோரைக் கொண்டு சோதித்து அவர்களுக்கு உள்ளவாறு மெய்யுணர்வு கொளுவுதல் நாட்டில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நலம் பயக்கும் செயலாகும் எ - று.

ஞானமிலாதார் தம் புறவேடத்தால் தாம் கெடுதலோடு தம்மை நம்பிய பிறரையும் கெடுப்பாராதலின் வேந்தன் தக்காரைக் கொண்டு அன்னோரைத் திருத்தி நல்வழிப்படுத்துதல் அவர்களை உய்வித்தலோடு அவர்களை நம்பிக் கெடாதவாறு உலக மக்களையும் உய்வித்த நற்செயலாம் என்பார், ‘ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே’ என்றார். சடை சிகை மெய்யுணர்வையும் பூனூல் சாத்திர ஞானத்தையும் புலப்படுத்தும் அடையாளங்களாகும். ஞானமுடையார் இவரெனச் சோதித்துணரும் மெய்யுணர்வு ஏனையோர்க்கு இருத்தலியலாதாகலின் அரசன் ஞானிகளைக் கொண்டே சோதித்தல் வேண்டும் என்பார் ‘ஞானிகளாலே சோதித்து’ என்றார். சடை, துறவிகட்குரியது. சிகை, இல்லறத்தார்க்குரியது.