பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

திருமந்திரம்


காவலன் காவலின்றெனின் இன்றாம்’ எனவரும் மணிமேகலைத் தொடராற் புலனாம்:

‘அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’ (543)

என்றார் தெய்வப்புலவரும்.

‘இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்’ (547)

என்பது திருக்குறள்.

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்’ (590)

‘தொழப்படுந் தேவர்தொழப் படுவானைத் தொழுதபின்னைத்
தொழப்படுந் தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் தொண்டரையே’

எனவரும் அப்பர் அருள்மொழி இங்கு நினைத்தற்குரியதாம்.


56. தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண்ட முஞ்செயும் அம்மையில்; இம்மைக்கே
மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே. (247)

அவரவர்க்குரிய சமய நெறியில் வழுவாதொழுகச் செய்தல் அரசனது கடமை யென்கின்றது.