பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

பதிப்புரை


தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாக விளங்குவது சைவ சமயம், மக்கள் உள்ளத்திலே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கி அன்பு நெறியில் ஒழுகச் செய்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வத் திருவருள் பெற்ற சைவசமயப் பெருமக்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். அவற்றுள் பத்தாவது திருமுறையாகத் திகழ்வது திருமூல நாயனர் அருளிச்செய்த திருமந்திரம். தமிழ் மூவாயிரம் என்னும் இத் திருமுறை சைவ சிந்தாந்த சாத்திரமாகவும் தோத்திரமாகவும் விளங்கும் தனிச்சிறப்புடையது; சிவாகமவுண்மைகளும் உலக வாழ்க்கையும் ஆகிய இருவகைப் பொருள்களையும் இனிய தமிழால் விரித்துக் கூறுவது; உலக வாழ்க்கையிலே எல்லோரும் மேற்கொண்டு ஒழுகத்தக்க நல்வாழ்க்கை முறையினையும் சிறப்பாகச் சமயச் சான்றோர்களால் உணர்ந்து போற்றத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருசேர அறிவுறுத்துவது.

திருமூல நாயனர் அருளிய இத் திருமந்திர நுண் பொருள்களைத் திருமுருக கிருபானந்த வாரியாரவர்கள் வானொலியிற் பேசக்கேட்டு மகிழ்ந்த திருவாளர் R. கனகசபைப் பிள்ளை அவர்கள், பலரும் எளிதின் உணர்ந்து பயன் பெறுதற்குரியவகையில் உள்ள திருமந்திரப் பாடல்கள் சிலவற்றையாவது திரட்டி அவற்றின் பொருளை உணர்ந்துகொள்ளுதல் நலமாகும் என்று தெரிவித்தார்கள். சிதம்பரம் நகரமன்றத்தலைவராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையுறுப்பினராகவும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராகவும் நாட்டின் நலங்கருதும் பல்வேறு குழுக்களின்