பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi


களின் மூத்த மைந்தர் செந்தமிழ்ச் செல்வர் திரு R. கனகசபை பிள்ளையவர்களால் தொடங்கப்பெற்று அவர்கள்பால் அன்பும் நன்மதிப்புமுடைய அன்பர்களின் ஆதரவினால் நிகழும் தில்லைத் தமிழ்மன்றத்தின் அறிவுத்தொண்டினைப் பாராட்டித் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுர ஆதீனத்தின் இருபத்தாறாவது பட்டத்தில் எழுந்தருளியிருக்கும் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்துரை வழங்கியருளினார்கள். தில்லைத் தமிழ்மன்றத்தின் சார்பில் தமிழ்வகுப்பு நிகழ்தற்குத் தங்கள் ஆதீனத் திருமடத்தில் இடந்தந்தருளும் அருள்மிகு குருமகா சந்நிதானம் அவர்களின் திருவடிகளுக்குத் தில்லைத் தமிழ் மன்றத்தின் சார்பில் அடியேனது உளங்கனிந்த வணக்கத்தினையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

பல அலுவல்களுக்கிடையே விரைந்து எழுதப்பெற்று வெளிவரும் இந்நூலின் உரையில் எனது அறியாமையால் நிகழ்ந்த குற்றங்களை நீக்கி நற்பொருள்களைக் கொள்ளும்வண்ணம் அறிஞர் பெருமக்களை வேண்டுகின்றேன். திருமந்திரப் பொருளை யுணர்ந்துகொள்ளும் முறையில் நூல்கள் இயற்றியுள்ள அறிஞர் பெருமக்களுக்கு எனது நன்றியுரியதாகும்.

‘ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே’ என்னும் நோக்கத்துடன் தில்லைத் தமிழ்மன்றத்தினை நிறுவி இத்திருமுறைப்பணியில் என்னையும் அன்புடன் ஈடுபடுத்திய தில்லைத் தமிழ்மன்றத்தார்க்கு எனது உளமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூலினை ஆர்வமுடன் வனப்புற அச்சிட்டுத் தந்த அண்ணாமலைநகர் சிவகாமி அச்சகத்தாரது பணி அன்பர்களின் பாராட்டுக்குரியதாகும்.

அன்புள்ள

க. வெள்ளைவாரணன்