பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


இருந்து இறைவனை வழிபாடு செய்து அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள்புரியும் திருத்தலமாகிய திருவாவடுதுறையையணுகித் திருக்கோயிலை வலம்வந்து மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையில் அத் தலத்தைவிட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறை யிறைவர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லும் பொழுது வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலேயிலே பசுக் கூட்டங்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனுாரிலே ஆனிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாய மூலன் என்பான் அவ்விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடுபட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்து கொள்ள உயிர் நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து கிடந்தான். அந்நிலையில் அவனால் அன்புடன் மேய்க்கப் பெற்ற பசுக்கள் உயிர் பிரிந்த அவனது உடம்பினைச் சுற்றி, நெருங்கி நின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.

அத்துயரக் காட்சியைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவரது திருவுள்ளத்திலே ‘பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்’ என்றதோர் எண்ணம் இறைவர் திருவருளால் தோன்றியது. இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா என எண்ணிய சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டுத் தமக்குத்தெரிந்த கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். எழுதலும்