பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


சுற்றியிருந்த பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடி விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அது கண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பி மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினர். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையிலிறங்கி நன்னீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத் தருளினார்.

அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெதுவாக நடந்து சாத்தனுாரை யடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்தபின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி ‘என் கணவர் பொழுது சென்றும் வரவில்லேயே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ?’ என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக்கொண்டு வழியெதிரே செல்பவள் சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். ‘இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்’ என எண்ணினாள். அவரைத் தளர்வின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுதற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவள் தம்மைத் தீண்டாதவாறு தடுத்து நிறுத்தினர். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற நிலையினைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து