பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5



சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர், யோகு கலைந்து எழுந்து முதல் நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தம்முடம்பினை மறைத்துவைத்த இடத்தினையடைந்து தம்முடம்பைத் தேடிப் பார்த்தார். வைத்த இடத்தில் அது காணப்படவில்லை. இது மறைந்துபோன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். சிவபெருமான் உயிர்கள்பால் வைத்த பெருங்கருணையினாலே அருளிய சிவாகமங்களின் அரும் பொருள்களை இந்நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார். இவ்வுண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அவர்களெல்லோரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமன் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டகன்று திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரச மரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்து அமர்ந்து, நெஞ்சக் கமலத்தில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.

இவ்வாறு சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார், ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும்பொருட்டு ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன்பிலிற்றும் திருமந்திர மாலையாகிய ஞானப்பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து