பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 போற்றும் நிலையில் ‘ஒன்றவன் தானே?’ என்னும் திருப் பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்களை அருளிச்செய்தார். இங்ஙனம் தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனிதிருந்தார். திருமூலர் அருளிய திருமந்திரமாலை நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ்கின்றது எனச் சேக்கிழார் பெருமான் திருமூல நாயனர் வரலாற்றினைப் பெரியபுராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். திருமூலர் வரலாற்றில் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிய திருப்பாடல்கள் அகச் சான்றாக அமைந்துள்ளன.

நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் “நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்” எனத் திருமூல நாயனாரைப் போற்றியுள்ளார். திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார்களின் வரலாற்றை வகைப்படுத்துணர்த்தும் முறையில் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள்,

“குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல
     மேய்ப்போன் குரம்பைபுக்கு
முடிமன்னு கூனற் பிறையாளன்
     றன்னை முழுத்தமிழின்
படிமன்னு வேதத்தின் சொற்படியே
     பரவிட்டுஎன் உச்சி
அடிமன்ன வைத்த பிரான்
     மூலனாகிய அங்கணனே”