பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருமூலநாயனார் காலம்

நம்பியாரூரராகிய சுந்தரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் ‘நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்’ எனத் திருமூலநாயனாரைப் போற்றியுள்ளார். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களில் திருமூலர் அருளிய திருமந்திரப்பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் பல இடங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளன. எனவே திருமூல நாயனரது காலம் கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்கு முற்பட்டதென்பது நன்கு தெளியப்படும்.

திருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந்நாட்டின் தாய்மொழியாகிய தமிழும் தமிழ்நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப் பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்துகொள்வதில் அக்காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம் மொழிகள் யாவும் மக்கள் நலங்கருதி அண்டமுதல்வனாகிய இறைவனால் அறமுதற் பொருள்களை உணர்ந்து உய்தி பெறுதற்குரிய சாதனமாகப் படைத்தளிக்கப் பெற்றன. இப் பதினெண் மொழிகளில் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப்பெற்றனர் என்பது, ‘பண்டிதராவார் பதினெட்டுப் பாடையுங், கண்டவர் கூறுங் கருத்தறிவாரென்க’ (59) எனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும். இவ்வாறு தமிழுடன் ஏனைய