பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


பகுதியிலும் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியம் புறத்திணையியல் 20-ம் சூத்திரவுரையில்

“யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்தேயத்து அனைநிலை வகையோராவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ்செய்வோர் தாபதப் பக்கத்தராவர்”

என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம், பெருமை வாய்ந்த சிவயோகியாராகிய திருமூலநாயனாரையும் அவர்தம் மாணாக்கர்களையும் குறித்ததெனக் கருதவேண்டியுளது.

ஆரியமும் தமிழும் ஆகிய இருமொழிகளையும் நன்கு பயின்று குமரிமுதல் இமயம்வரை போக்குவரவு புரிந்த தவமுனிவர் திருமூலர். அவர் அருளிய திருமந்திரத்தில் சமய நூற் குறியீடுகளாகிய வட சொற்களும் அக்காலப் பொதுமக்கள் வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் காணப்படுதல் இயல்பே. திருமூலர் தம் நூலில் ஆறு சமயங்கள் எனவும் அவற்றிற் பலவாகிய நூறு சமயங்கள் எனவும் தம் காலத்து வழங்கிய சமயங்கள் பற்றிக் குறித்துள்ளார். எனினும் வேதவழக்கொடு மாறுபட்ட புத்த சமண மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும் திருமந்திரத்தில் இடம் பெறவில்லை. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், புத்த சமண மதங்கள் தமிழ்நாட்டிற் பரவி நன்கு வேரூன்றுவதற்கு முன்னரே திருமூலர் தமிழாகமமாகிய இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது இனிது புலனாகும்.